சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் பருவமழைக்கு முன்பாக ஆறு, வாய்க்கால்களில் தூர்வாரும் பணி
சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக ஆறு, வாய்க்கால்களில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள ரூ.20 கோடிக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தமிழக அரசுக்கு நீர்வளத்துறையின் தலைமை என்ஜினீயர் கடிதம் எழுதியுள்ளார். சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, கடலூர் மாவட்டங்களில் 2022-23-ம் ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை காலத்திற்கு முன்பு தயார் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகளில் முன்னுரிமை தர வேண்டிய பணிகளுக்கான பட்டியலையும் அளித்துள்ளார்.
மேலும் அந்த பணிகளின் தேவைகள் பற்றியும் அவர் பட்டியலிட்டுள்ளார். சென்னையில் உள்ள பெரிய நீரோட்டங்களான கூவம் ஆறு, பக்கிங்காம் கால்வாய், ஓட்டேரி நல்லா, விருகம்பாக்கம் கால்வாய் மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆற்று முகத்துவாரங்கள், வெள்ள வடிகால்கள் ஆகியவை நீர்வளத்துறையினால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
வெள்ளக்கட்டுப்பாடு
பெரிய நீரோட்டங்களில் திடக்கழிவுகளையும், கட்டிடக்கழிவுகளையும் கொட்டுவது நீரோட்டத்திற்கும், உள்கட்டமைப்புகளுக்கும் இடையூறாக இருப்பதோடு நோயை பரப்புவதாகவும் உள்ளது. எனவே அங்கு மண்டிக்கிடக்கும் ஆகாயத்தாமரை போன்றவற்றையும், கழிவுகளையும் அப்புறப்படுத்தி, தூர்வாரி, மழை காலத்தில் தடையற்ற நீரோட்டத்திற்கு வழிவகை செய்ய வேண்டும். இதன் மூலம் வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் கட்டுப்படுத்த முடியும்.
இந்த பணிகள் அனைத்தும் மழை காலத்திற்கு முன்பு தொடங்கப்பட வேண்டும் என்பது மிக அவசியமாக உள்ளது. சென்னை மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய இந்த பணிகளுக்காக வடகிழக்கு பருவமழை காலத்திற்கு முன்பதாக 2011-ம் ஆண்டில் இருந்து அரசு நிர்வாக அனுமதியை வழங்கி வருகிறது. அதுபோல நிதியும் அனுமதிக்கப்பட்டு வருகிறது.
ரூ.20 கோடி அனுமதி
எனவே இந்த பணிகளுக்காக அரசு ரூ.20 கோடியை அனுமதித்து உத்தரவிட வேண்டும் என்று அரசை நீர்வளத்துறையின் தலைமை என்ஜினீயர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அவரது கோரிக்கையை ஏற்று, இந்த 5 மாவட்டங்களிலும் ஆறுகள், வாய்க்கால்களில் மழைநீர் தடையின்றி செல்வதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய 122 பணிகளுக்கும், அந்த பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.20 கோடிக்கான நிர்வாக மற்றும் நிதி அனுமதியை வழங்கி அரசு உத்தரவிடுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.