இந்துத்துவா சக்திகளை தடுக்க திராவிட இயக்கங்களை பாதுகாக்க வேண்டும் மதுரை கூட்டத்தில் வைகோ பேச்சு

இந்துத்துவா சக்திகள் தமிழகத்தில் நுழைவதை தடுக்க, திராவிட இயக்கங்களை பாதுகாக்க வேண்டும் என மதுரையில் வைகோ பேசினார்.

Update: 2023-08-14 20:00 GMT


இந்துத்துவா சக்திகள் தமிழகத்தில் நுழைவதை தடுக்க, திராவிட இயக்கங்களை பாதுகாக்க வேண்டும் என மதுரையில் வைகோ பேசினார்.

ஆலோசனை கூட்டம்

அண்ணாவின் 115-வது பிறந்தநாள் மாநாடு அடுத்த மாதம் 15-ந் தேதி மதுரையில் நடக்கிறது. இதனையொட்டி, மதுரை மண்டல ம.தி.மு.க. நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று, தெப்பக்குளம் நோட்புக் அரங்கில் நடைபெற்றது. பூமிநாதன் எம்.எல்.ஏ., மாநகர் மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமை தாங்கினர். சிறப்பு அழைப்பாளராக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

கலிங்கப்பட்டி என்ற சிறிய கிராமத்தில் பிறந்த போது நான் ஒரு அரசியல் கட்சி தொடங்குவேன் என்றோ, இத்தனை ஆண்டுகள் இயக்குவேன் என்றோ கனவு கூட கண்டதில்லை. அண்ணா மீது கொண்ட பற்றின் காரணமாக உயிரையும் கொடுக்க துணிந்துதான் தி.மு.க.வில் பணியாற்றினேன். பிரிட்டிஷ் காலத்தை போல ஒரு கவர்னரை தமிழகத்திற்கு நியமித்து, திராவிட இயக்கங்களை அழித்துவிட முயற்சிக்கிறார்கள்.

பாதுகாக்க வேண்டும்

ம.தி.மு.க. தமிழ்நாட்டுக்கு என்ன செய்தது? என்று கேட்கிறார்கள். ஸ்டெர்லைட், நியூட்ரினோ வராமல் தடுத்தோம், முல்லை பெரியாறு அணையை பாதுகாத்தோம், தஞ்சைக்கு மீத்தேன் வராமல் தடுத்தோம். இப்படி எவ்வளவோ செய்துள்ளோம். 10 ஆண்டுகளுக்கு முன்னால் பா.ஜ.க. என்றால் யாருக்காவது தெரியுமா?. ஆனால், தற்போது மீண்டும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என மோடி, அமித்ஷா கூறுகிறார்கள். அந்த தைரியம் எப்படி வந்தது?. தமிழ்நாட்டை காக்க வேண்டும் என்றால், இந்துத்துவா, சனாதன சக்திகள் ஊடுருவ விடாமல் தடுக்க வேண்டும். அதற்கு தி.மு.க.வுடன் கைகோர்த்து கொள்வோம்.

விமர்சனங்கள் எவ்வளவோ வரலாம். அதைப்பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. பா.ஜ.க.வை தமிழகத்தில் நுழைய விடாமல் தடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதற்கு திராவிட இயக்கங்களை பாதுகாக்க வேண்டும்.

நடைபயணம்

நான் இதுவரை 7 ஆயிரம் கிலோ மீட்டருக்கு மேல் நடைபயணம் மேற்கொண்டிருக்கிறேன். கன்னியாகுமரி முதல் சென்னை வரை, தாமிரபரணி முதல் சென்னை வரை என பல முறை நடைபயணம் செய்திருக்கிறேன். அன்று நடைபயணம் செய்த போது ஊடக ஆதரவு கூட கிடையாது. எல்லா இடத்திற்கும் நடந்துதான் செல்வேன். மக்களுடன் மக்களாக இருப்பேன். சாலையோரங்களில் ஓய்வெடுப்பேன். எங்கும் அறை போட்டு தங்கவில்லை. இதனை யாரையும் ஒப்பிடுவதற்காக கூறவில்லை. ஆனால், இன்று நடைபயணம் மேற்கொள்ளும் சிலருக்கு பக்கம் பக்கமாக விளம்பரம் வருகிறது.

தொடர்ந்து தமிழக மக்களின் நலனுக்காக போராடி கொண்டிருக்கிறேன். ம.தி.மு.க. தியாகத்தால் உருவான கட்சி. தொண்டர்களுக்கு ஒருபோதும் துரோகம் செய்ய மாட்டேன். மதுரையில் நடக்கும் அண்ணா பிறந்தநாள் மாநாட்டில் லட்சக்கணக்கானவர்கள் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்