திராவிட மாடல் ஆட்சி தொடரும்: கருணாநிதி சிலை திறப்பு விழாவில் முதல்-அமைச்சர் பேச்சு
மக்கள் தந்த பொறுப்பை நிறைவேற்றுவேன் என்றும், திராவிட மாடல் ஆட்சி தொடரும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கள்ளிப்பட்டியில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு விழா நேற்று நடந்தது.
விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிலையை திறந்து வைத்து பேசியதாவது:-
ஈரோடு குருகுலம்
ஈரோடு தந்தை பெரியாரின் மண் மட்டுமல்ல. தலைவர் கருணாநிதியை உருவாக்கிய ஊர். அவரது குருகுலம். இந்த குருகுலத்தின் தலைவர் சிலையை பார்க்கும்போது உணர்வு வருகிறது. உணர்ச்சி மேலிடுகிறது. உத்வேகம் பிறக்கிறது. உற்சாகம் பிறக்கிறது. மகிழ்ச்சி ஏற்படுகிறது. பூரிப்பு வருகிறது.
ஈரோட்டு பள்ளியிலும், காஞ்சி கல்லூரியிலும் நான் படித்தேன் என்று தலைவர் குறிப்பிடுவார்.
மிகப்பெரிய அன்பு
தந்தை பெரியாருக்கு தலைவர் மீது மிகப்பெரிய அன்பு உண்டு. புதுச்சேரியில் சாந்தா நாடகத்தை கலைஞர் அரங்கேற்றியபோது, அந்த விழாவில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பட்டுக்கோட்டை அழகிரி ஆகியோர் சென்றனர்.
சிவகுரு வேடத்தில் கலைஞர் நடித்தார். நாடகம் பாதியில் நடந்து கொண்டிருந்தபோது கலவர கும்பல் உள்ளே புகுந்து கலவரம் ஏற்படுத்தியது. அதில் பெரியார் உள்பட 3 பேரையும் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். பின்னர் கலைஞர், பாவேந்தர் பாரதிதாசன், கல்யாணசுந்தரம் ஆகியோர் வீதியில் சென்றபோது கலவர கும்பல் 3 பேரையும் கடுமையாக தாக்கி குற்றுயிராக சாக்கடையில் வீசி சென்றார்கள். அங்குள்ள மக்கள் இவர்களை பார்த்து இறந்துவிட்டார்கள் என்றே நினைத்தனர்.
ரத்தத்தில் உருவானது
இந்த தகவல் தந்தை பெரியாருக்கு சென்றது. அவரே ஓடி வந்து கலைஞரை தூக்கி மடியில் கிடத்தி, அவரது காயங்களுக்கு மருந்திட்டார். இனிமேல் இங்கு இருக்க வேண்டாம், ஈரோடு வந்துவிடு என்று அழைத்து வந்தார். விடுதலை இதழின் துணை ஆசிரியராக நியமித்தார். குடியரசு இதழுக்கும் துணை ஆசிரியராக நியமித்தார். அந்த நேரத்தில்தான் திராவிடர் கழகம் தொடங்கப்பட்டது. கட்சி கொடியாக கருப்பு, சிவப்பு பொட்டு என்று முடிவு செய்யப்பட்டு கொடியை வரைந்தபோது, சிவப்பு நிறத்துக்காக தனது ரத்தத்தை குண்டூசியால் குத்தி பொட்டாக வைத்தவர் கலைஞர். இவ்வாறு அவரது ரத்தத்தில் உருவானது திராவிடர்கழகம் கொடி.
மறக்க முடியாது
1971-ம் ஆண்டு சேலத்தில் தந்தை பெரியாருக்கு வெள்ளி சிம்மாசனம் வழங்கும் விழா நடந்தது. அதில் கலைஞர் கலந்து கொண்டார். தள்ளாத வயதில் இருந்த பெரியார் கலைஞரை கையசைத்து அழைத்து அந்த வெள்ளி சிம்மாசனத்தில் உட்கார வைத்தார்.
அதுதான் எனது வாழ்வில் மறக்கமுடியாத நிகழ்வு அது என்று கலைஞர் குறிப்பிடுவார். இன்று எனது மறக்க முடியாத நிகழ்வாக கலைஞரின் குருகுலமான இந்த மண்ணில் அவரது சிலையை திறந்து வைப்பதை பெருமையாக கருதுகிறேன்.
தந்தை பெரியார் முடிவு
இங்கே தந்தையின் சிலையை திறக்கும் மகனாக இல்லை, தலைவரின் சிலையை திறக்கும் தொண்டனாக நிற்கிறேன். கலைஞர் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோதே அவருக்கு சிலை திறக்க வேண்டும் என்று அறிஞர் அண்ணாவிடம் அனுமதி பெற்று அதற்கான குழுவின் தலைவராகவும் தந்தை பெரியார் இருந்தார். அந்த சிலை மவுண்ட் ரோடு என்கிற தற்போதைய அண்ணாசாலையில் நிறுவப்பட்டது. அதன் பிறகு நடந்த சம்பவங்களையும் பற்றி கூற வேண்டியது இல்லை. ஆனால் கலைஞருக்கு சிலை அமைப்பது என்பது தந்தை பெரியார் எடுத்த முடிவு என்பதை குறிப்பிடுகிறேன்.
தமிழக்தில் 6-வது முறையாக தி.மு.க. ஆட்சி பொறுப்பு ஏற்று இருக்கிறது.
திராவிட மாடல் தொடரும்
சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்பது கலைஞரின் கொள்கை. அவரது மகனாகிய நான் சொல்கிறேன், சொல்லாததையும் செய்வோம். சொல்லாமலேயே செய்வோம் என்பதே எனது கொள்கை.
தலைவர் கலைஞரின் வழியில் 6-வது முறையாக தி.மு.க.வுக்கு வாய்ப்பு அளித்தீர்கள். ஆட்சி பொறுப்புக்கு நான் மக்களாகிய உங்களால் வந்திருக்கிறேன். உங்கள் உழைப்பால், கலைஞரின் உயிரினும் மேலான உடன்பிறப்புகளாகிய உங்களால் ஏற்றுக்கொண்ட இந்த பொறுப்பை நிறைவேற்றுவேன். இதை ஒரு உறுதி மொழியாக ஒரு சபதமாக கூறுகிறேன். திராவிட மாடல் ஆட்சி தொடரும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
முதல்-அமைச்சர் பேசி முடித்ததும் கொட்டித்தீர்த்த மழை
கருணாநிதி சிலை திறப்பு விழா தொடங்குவதற்கு முன்பே, லேசான மழை தூறல் இருந்தது. முதல்-அமைச்சர் வந்த நேரத்தில் மழை நின்று வானம் வெறித்தது.
முதல்-அமைச்சர் மேடையில் பேசிக்கொண்டு இருக்கும்போதே மீண்டும் சிறு தூறல் விழுந்தது. அவர் பேசி முடித்து கீழே இறங்கிய மறு வினாடி மழை வெளுத்து வாங்கியது. 30 நிமிடங்களுக்கும் மேலாக மழை நீடித்தது.