ரூ.10 லட்சத்தில் வடிகாலை தூர்வாரும் பணி

வாய்மேட்டில் ரூ.10 லட்சத்தில் வடிகாலை தூர்வாரும் பணியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்

Update: 2023-08-03 18:45 GMT

வாய்மேடு:

நாகை மாவட்டம் வாய்மேட்டில் முள்ளிஆற்றின் வடிகாலாக புதுஆறு உள்ளது. இந்த ஆற்றை கடந்த 20 ஆண்டுகளாக தூர்வாரவில்லை. இதன் காரணமாக ஆற்றில் ஆகாயத்தாமரை மண்டி கிடந்தது. இங்கிருந்து தண்ணீர் வடியும் பகுதிக்கு தண்ணீர் சென்றடைவதிலும் சிரமம் இருந்தது.

தண்ணீர் வடியாமல் மழை காலங்களில் தேக்கம் ஏற்பட்டு பயிர்கள் சேதம் அடைந்து வந்தன. இதையடுத்து வடிகாலை தூர்வார வேண்டும் என விவசாயிகள் நாகை மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்தனர்.

அதன்படி நாகை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பொதுப்பணித்துறை மூலம் ரூ.10 லட்சத்தில் வடிகாலை தூர்வாரி, அங்கு உள்ள ரெகுலேட்டரை சரி செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து வடிகாலை தூர்வாரும் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. இந்த பணியை பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் மதியழகன், கூட்டுறவு வங்கி இயக்குனர் உதயம் முருகையன், பணி ஆய்வாளர் ஆளவந்தான், பணி உதவியாளர் முருகேசன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அன்பு வேலன் ஆகியோர் உடன் இருந்தனர். 20 ஆண்டுகளுக்கு பிறகு தூர்வாரும் பணி நடந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன் மூலம் ஆயிரம் ஏக்கர் சாகுபடி நிலங்கள் வடிகால் வசதி பெறும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்