வடிகால் வாய்க்கால்களை தூர்வார வேண்டும்

மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு வடிகால் வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என நாகை நகர்மன்ற கூட்டத்தில் உறுப்பினர் வலியுறுத்தினார்.

Update: 2022-09-30 18:45 GMT

வெளிப்பாளையம்:

மழைகாலம் தொடங்குவதற்கு முன்பு வடிகால் வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என நாகை நகர்மன்ற கூட்டத்தில் உறுப்பினர் வலியுறுத்தினார்.

நகர்மன்ற கூட்டம்

நாகை நகர்மன்ற கூட்டம் தலைவர் மாரிமுத்து தலைமையில் நடந்தது. கூட்டத்தில் உறுப்பினர்களிடையே நடந்த விவாதம் வருமாறு:-

கவிதா(அ.தி.மு.க.):- நாகை நகர எல்லையில் குடிநீர் வினியோகம் செய்யும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடுகிறது. எனவே குடிநீர் குழாய் உடைப்புகளை சரி செய்ய வேண்டும். அதுவரை லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஸ்ரீதேவி (ஆணையர்):- கீழ்வேளூர் அருகே ஓடாச்சேரி என்னும் இடத்தில் உள்ள நீரேற்று நிலையத்தில் பணிகள் நடந்து வருகிறது. பணிகள் முடியும் வரை நாகை நகராட்சியில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

வடிகால் வாய்க்கால்களை தூர்வார வேண்டும்

பரணிகுமார்(அ.தி.மு.க.):- மழைகாலம் தொடங்குவதற்குள் நகராட்சியில் வடிகால் வாய்க்கால்களை தூர்வார வேண்டும்.

மாரிமுத்து (தலைவர்):- நகர்மன்ற உறுப்பினர்கள் தங்களது வார்டுகளில் மழைநீர் தேங்கும் இடங்கள் குறித்து முன்னதாக தகவல் தெரிவிக்க வேண்டும். அந்த இடங்கள் கண்டறிந்து மழை காலம் தொடங்குவதற்கு முன்பு தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும். பொதுசுகாதாரப்பணி மற்றும் திடக்கழிவு மேலாண்மை பணியின் கீழ் நாகை நகராட்சி எல்லைக்குட்பட்ட 36 வார்டுகளிலும் தூய்மை பணி நடந்து வருகிறது. இதற்காக ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சரியாக பணிகளை முடிப்பது இல்லை

கலா(தி.மு.க.):- குடிநீருடன் கழிவுநீரும் கலந்து வருகிறது. இதற்கு காரணம் நகராட்சியில் பணிகள் செய்யும் பணியாளர்கள் சரியாக பணிகளை முடிப்பது இல்லை. எனவே எந்த பணியை எடுத்து கொண்டாலும் சரியான முறையில் முடிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

ஜெயகிருஷ்ணன் (பொறியாளர்):- ஏற்கனவே பணியாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே இனி வரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் நடக்காது.

முகமதுநத்தர்(காங்):-பள்ளிக்கு வரும் குழந்தைகள் காலை நேரத்தில் சாப்பிடாமல் வருவார்கள் என அறிந்து அவர்களின் பசியை போக்க காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

கால்நடை அடைக்கும் பட்டி

முகுந்தன்(தி.மு.க.):- நகராட்சிக்கு சொந்தமான கால்நடை அடைக்கும் பட்டி தனியார் வசம் உள்ளது.அங்குள் ஆக்கிரமிப்பை அகற்றி அந்த இடத்தில் மீண்டும் பட்டி அமைத்து சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை அடைக்க ஏற்பாடு செய்யலாம்.

ஆணையர்:- அந்த இடம் கோர்ட்டு விசாரணையில் உள்ளது. வழக்கு முடிந்தால் தான் நடவடிக்கை எடுக்க முடியும்.இவ்வாறு விவாதம் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்