நீர்வரத்து கால்வாய்களை தூர்வாரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
திருப்பத்தூர் வீட்டுவசதி வாரிய பகுதிகளில் நீர்வரத்து கால்வாய்களை தூர்வார கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருப்பத்தூர் வீட்டுவசதி வாரிய பகுதிகளில் நீர்வரத்து கால்வாய்களை தூர்வார கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீர்வரத்து கால்வாய்கள்
திருப்பத்தூரில் கடந்த 17, 18-ந் தேதிகளில் பெய்த கனமழையால் திருப்பத்தூர் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரம்பியது. இதனால் நீர்வரத்து கால்வாய்கள் மூலம் வீட்டு வசதி வாரிய பகிர்வில் நீர்வரத்து கால்வாய்கள் தூர்வாரப்படாமல் இருந்ததால் அப்பகுதியில் சுமார் 2 ஆயிரம் வீடுகள் தண்ணீரில் மூழ்கியது. பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் தூர்வாரப்பட்டது. ஆனாலும் வீட்டு வசதி வாரியம் பகுதி-2ல் அங்காளம்மன் கோவில் அருகே உள்ள நீர்வரத்து கால்வாய்கள் தூர்வாரப்படவில்லை. இதனால் அந்த கால்வாய்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.
சாலை மறியல்
மீண்டும் மழை பெய்தால் தண்ணீர் வீட்டை சூழ்ந்து கொள்ளும் அபாயம் உள்ளதாகவும் உடனடியாக தூர்வார கோரியும் 200-க்கும் மேற்பட்டோர் பதாகைகளை ஏந்தி திருப்பத்தூர் -தர்மபுரி, கிருஷ்ணகிரி சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். அப்போது திருப்பத்தூர் நகராட்சியை கண்டித்தும், கலெக்டரை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
சாலை மறியல் காரணமாக 3 சாலைகளில் இருந்து வந்த வாகனங்கள் பல கிலோ மீட்டர் தூரம் நின்றது இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன் தலைமையில் போலீசார் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் சாலை மறியலை கைவிட மறுத்தனர். பின்னர் நகராட்சி ஆணையாளர் ஜெயராம ராஜா வந்து பொதுமக்களிடம் பேசியதை தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டனர். அதைத்தொடர்ந்து வீட்டு வசதி வாரிய பகுதியில் உள்ள நீர்வரத்து கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு இருக்கும் இடங்களை பொதுமக்கள் காட்டினார்கள். உடனடியாக தூர்வாரி தருவதாக ஆணையாளர் உறுதி அளித்தார்.
போக்குவரத்து பாதிப்பு
சாலை மறியலால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது பின்னர் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நீர்வரத்து கால்வாய்களை தூர்வாரக்கோரி ஊர்வலமாக சென்று நகராட்சி அலுவலகத்திலும், பின்னர் அங்கிருந்து கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று மனு அளித்தனர்.