வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றம்

கச்சிராயப்பாளையம் அருகே வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

Update: 2023-08-22 18:50 GMT

கச்சிராயப்பாளையம், 

கல்வராயன்மலை அடிவாரத்தில் கோமுகி அணை உள்ளது. இந்த அணையின் பாசனவாய்க்கால் தாவடிப்பட்டு வழியாக செல்கிறது. இதில் தாவடிப்பட்டு பிரிவு சாலை வழியாக மாதவச்சேரி சிவகங்கை கிராமத்திற்கு செல்லும் பாசன வாய்க்காலை சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர். கோர்ட்டு உத்தரவுப்படி இந்த வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்ற பொதுப்பணி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று சென்றனர். இதில் வாய்க்காலை ஆக்கிரமித்து சவுந்தரராஜன் என்பவர் சாகுபடி செய்திருந்த கரும்பு பயிரை பொக்லைன் எந்திரம் மூலம் அதிகாரிகள் அகற்றினர். அப்போது அங்கிருந்த சவுந்தரராஜன், ஆக்கிரமிப்பு அகற்றும் பணி ஒரு தலைபட்சமாக நடக்கிறது. என்னை போன்று பலரும் வாய்க்காலை ஆக்கிரமித்துள்ளனர். அதனையும் அகற்ற வேண்டும் என கோரி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, பொக்லைன் எந்திரத்தை மறித்து நின்றார். அப்போது அவரிடம், கச்சிராயப்பாளையம் போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பாரபட்சம் இன்றி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதனை ஏற்று சவுந்தரராஜன் அங்கிருந்து சென்றனார்.

Tags:    

மேலும் செய்திகள்