கட்டி முடிக்கப்பட்ட வீட்டுக்கு பணம் கொடுக்காமல் இழுத்தடிப்பு குடும்பத்துடன் தொழிலாளி தர்ணா போராட்டம்

கட்டி முடிக்கப்பட்ட வீட்டுக்கு பணம் கொடுக்காமல் இழுத்தடித்ததால் தொழிலாளி குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட்டார்.

Update: 2022-12-15 16:42 GMT

திருப்பத்தூர் அருகே உள்ள புதுக்கோட்டை ஊராட்சி கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் குமார். தொழிலாளி. இவரது மனைவி ஜெயசித்ரா. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இலவச வீடு கேட்டு பலமுறை மனு கொடுத்து வந்தனர். அதன் பேரில் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடு கட்டிக் கொள்ள பணி ஆணை வழங்கப்பட்டது

அதைத்தொடர்ந்து ரமேஷ்குமார் அக்கம் பக்கத்தில் வட்டிக்கு கடன் வாங்கி வீட்டைக் கட்டி முடித்தார். ஆனால் அதற்கான பணத்தை அதிகாரிகள் வழங்கவில்லை. கடந்த 10 நாட்களாக கட்டி முடிக்கப்பட்ட வீட்டிற்கு பணம் கேட்டு அலைந்துள்ளனர். அப்போது அதிகாரிகள் உங்கள் பகுதியில் இருந்து புகார் மனு வந்துள்ளது. அதனால் பணம் கொடுக்க முடியாது எனக் கூறி காலதாமதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் விரக்தி அடைந்த ரமேஷ் குமார் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்தையும் திரும்பவும் அரசிடமே வழங்கி விடுகிறோம் என்று கூறி இரவு 8.30 மணி வரை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து போலீசாரும், அதிகாரிகளும் நாளை பேசிக் கொள்ளலாம் என்று தெரிவித்ததை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்