சென்னையில் ஆவின் பால் தட்டுப்பாட்டை போக்கவேண்டும் -டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி சென்னையில் ஆவின் பால் தட்டுப்பாட்டை போக்கவேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட 'டுவிட்டர்' பதிவில் கூறியிருப்பதாவது:-
கடந்த 4 நாட்களாகவே சென்னையில் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி, பால் வழங்க மறுத்து உற்பத்தியாளர்கள் நடத்தும் போராட்டமும், அம்பத்தூர் ஆலையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறும்தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. குழந்தைகளுக்கு ஆவின் பால் வழங்க மருத்துவர்களே பரிந்துரைக்கின்றனர்.எனவே, தமிழ்நாடு அரசு தலையிட்டு ஆவின் பால் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். பால் உற்பத்தியாளர்களுடன் பேச்சு நடத்தி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பால் உற்பத்தியாளர்களுடன் அரசு உடனடியாக பேசி பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.