தக்காளி சாகுபடி மூலம் இரட்டிப்பு லாபம்; கள்ளிமந்தையம் விவசாயிகள் அசத்தல்

தக்காளி சாகுபடி மூலம் இரட்டிப்பு லாபம் பெற்று கள்ளிமந்தையம் பகுதி விவசாயிகள் அசத்தியுள்ளனர்.

Update: 2023-07-25 21:30 GMT

தக்காளி சாகுபடி மூலம் இரட்டிப்பு லாபம் பெற்று கள்ளிமந்தையம் பகுதி விவசாயிகள் அசத்தியுள்ளனர்.

தக்காளி விலை உயர்வு

'ஏழைகளின் ஆப்பிள்' என்று அழைக்கப்படுகிறது தக்காளி. ஆனால் கடந்த ஒரு மாத காலமாகவே ஆப்பிள் விலைக்கு தக்காளி விற்கப்படுகிறது. இதனால் ஏழைகளுக்கும் எட்டாக்கனியாக தக்காளி மாறியுள்ளது. விளைச்சல் பாதிப்பு, வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களால் நாடு முழுவதும் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது அதன் விலை சற்று குறைந்துள்ளது. இருப்பினும் பல்வேறு இடங்களில் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கும் மேலாகவே விற்பனையாகிறது. இதனால் இல்லத்தரசிகள் தங்களது சமையலில் தக்காளியை தவிர்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

மேலும் தக்காளி பெரும் பேசுபொருளாகவும் மாறியுள்ளது. திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகளில் தக்காளியை பரிசாக வழங்கும் சம்பவங்களும் நடந்துள்ளன. தக்காளிகளை வைத்துள்ள நபர்கள் பணக்காரர்களாக பார்க்கப்படுகின்றனர். அந்த வகையில் தக்காளி சாகுபடி செய்த விவசாயிகள் பலரும் லட்சாதிபதியாகவும், கோடீசுவரர்களாகவும் மாறினர். இது ஒருபுறம் என்றால் வடமாநிலங்களில் தக்காளிகளை திருடி விற்கும் சம்பவங்கள் நடந்துள்ளன. அந்த அளவுக்கு தக்காளிக்கு மவுசு அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தையத்தை சேர்ந்த விவசாயிகள் மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்ப தக்காளி சாகுபடி மூலம் இரட்டிப்பு லாபத்தை பெற்றுள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

குப்பையில் கொட்டினர்

திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தையம், இடையக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயமே பிரதான ெதாழிலாக உள்ளது. இங்கு தக்காளி, கத்தரிக்காய், வெங்காயம் உள்ளிட்ட காய்கறி பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் காய்கறிகள் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டத்தில் ஏராளமான விவசாயிகள் தங்களது தோட்டத்தில் ஒரேநேரத்தில் தக்காளியை சாகுபடி செய்தனர். விளைச்சல் அதிகரித்ததால் மார்க்கெட்டுகளில் அதன் விலை வீழ்ச்சியடைந்தது. போக்குவரத்து செலவுக்கு கூட கட்டுப்படியாகாததால் தக்காளியை குப்பையிலும், சாக்கடை கால்வாய்களிலும் கொட்டும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர்.

இந்தநிலையில் கள்ளிமந்தையத்தை சேர்ந்த விவசாயிகள் சூழ்நிலைக்கு தகுந்தபடி தக்காளி சாகுபடி மூலம் இரட்டிப்பு லாபத்தை பெற்று அசத்தியுள்ளனர். அதாவது கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பிற பகுதிகளில் அனைத்து விவசாயிகளும் தக்காளி சாகுபடி செய்திருந்த நேரத்தில், கள்ளிமந்தையம் பகுதி விவசாயிகள் வேறு பயிரை சாகுபடி செய்திருந்தனர். அப்போது தக்காளி வீழ்ச்சியடைந்தது.

இரட்டிப்பு லாபம்

இதற்கிடையே கடந்த சில வாரங்களாக வரத்து குறைவால் தக்காளி விலை உயர்ந்தது. இந்த நேரத்தில் கள்ளிமந்தையம் பகுதி விவசாயிகள் தக்காளியை சாகுபடி செய்திருந்தனர். அறுவடைக்கு தயாரான நிலையில் தற்போது தக்காளியை பறித்து மார்க்கெட்டுக்கு அனுப்பி வருகின்றனர். அதற்கு நல்ல லாபமும் கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து கள்ளிமந்தையத்தை அடுத்த ஒண்டிபொம்மன்நாயக்கனூரை சேர்ந்த விவசாயி செல்வராஜ் கூறுகையில், பக்கத்து ஊர்களில் தக்காளி பயிரிட்டால் அதை பார்த்து மற்ற விவசாயிகளும் தக்காளியையே பயிரிடுவதால் வரத்து அதிகரிக்கும்போது அதன் விலை வீழ்ச்சியடைகிறது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மற்ற பகுதிகளில் விவசாயிகள் தக்காளியை விட்டு வேறு பயிரை சாகுபடி செய்த நிலையில், நாங்கள் தக்காளியை சாகுபடி செய்தோம். அதேபோல் பயிரை கவனத்தோடு முறையாக பராமரித்து வந்தோம். அதன்விளைவாக தற்போது தக்காளி விளைச்சலும் அதிகரித்தது. அதேபோல் மார்க்கெட்டுகளிலும் தக்காளிக்கு கூடுதல் விலை கிடைத்தது. ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தற்போது 14 கிலோ எடை கொண்ட தக்காளி பெட்டி ரூ.1,000 முதல் ரூ.1,300 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. சாதாரண நாட்களில் தக்காளி கிலோ ரூ.400 முதல் ரூ.500 வரை விற்பனையாகும். அது போதுமான லாபமாக இருந்தது. தற்போது ரூ.1,000-க்கும் மேல் விற்பனையாகி, இரட்டிப்பு லாபத்தை தந்துள்ளது என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்