வக்கீலுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

வக்கீலுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

Update: 2023-04-11 13:57 GMT

திருப்பூர்

திருப்பூரில் அரசு பெண் வக்கீல் மற்றும் அவருடைய மகளை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்ற வக்கீலுக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

அரசு வக்கீலுக்கு அரிவாள் வெட்டு

திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்தவர் ஜமீலா பானு (வயது 40). இவர் திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் அரசு வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவருடைய மகள் அமிர்நிஷா (21). இவர் சேலத்தில் உள்ள சட்டக்கல்லூரியில் படித்து வருகிறார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ந் தேதி மதியம் 2.20 மணிக்கு ஜமீலா பானு மற்றும் அவருடைய மகள் ஆகியோர் திருப்பூர் குமரன் ரோட்டில் தனியார் வணிக வளாகத்தில் உள்ள தன்னுடைய வக்கீல் அலுவலகத்தில் இருந்து பணியாற்றிக்கொண்டிருந்தனர். அப்போது திருப்பூர் பெரியதோட்டத்தை சேர்ந்த வக்கீலான ரகுமான்கான் (26) என்பவர், ஜமீலாபானு அலுவலகத்தில் புகுந்து அவருடைய மகள் அமிர்நிஷாவை சரமாரியாக வெட்டினார். மேலும் தடுக்க வந்த ஜமீலாபானுவுக்கும் தலை, கையில் வெட்டு விழுந்தது. அதன்பிறகு அங்கிருந்து ரகுமான்கான் தப்பினார்.

குண்டர் சட்டத்தில் கைது

இதில் படுகாயம் அடைந்த தாய்-மகள் இருவரையும் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். திருப்பூர் வடக்கு போலீசார் கொலைமுயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அமிர்நிஷா சேலம் கட்டக்கல்லூரியில் படிக்க சென்றபோது, ரகுமான் கான் அவருக்கு இடையூறு செய்துள்ளார். இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் ரகுமான் கானை கைது செய்தனர்.

இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த ரகுமான் கான் கோபத்தில் 2 பேரையும் வெட்டியது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் ரகுமான் கானை வடக்கு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ரகுமான் கான் திருப்பூர் கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதால் குண்டர் சட்டத்தில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆயுள் தண்டனை

இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. தாய்-மகளை அரிவாளால் வெட்டிக்கொலை செய்ய முயன்ற குற்றத்துக்கு ரகுமான் கானுக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் பாதிக்கப்பட்ட தாய், மகளுக்கு மொத்தம் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் அத்துமீறி வக்கீல் அலுவலகத்துக்குள் நுழைந்த குற்றத்துக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம், பெண்களை தொல்லை செய்த குற்றத்துக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் திருப்பூர் மாவட்ட குற்றத்துறை அரசு வக்கீல் கனகசபாபதி ஆஜராகி வாதாடினார். பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த வழக்கில் உதவுவதற்காக பெண் வக்கீல்கள் சத்யா, பூங்கொடி ஆகியோர் நியமிக்கப்பட்டு இருந்தனர்.

இந்த வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு எடுத்து ஒரு மாதத்துக்குள் சாட்சி விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதுபோல் கொலைமுயற்சி வழக்கில் மாவட்ட நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை வழங்குவது இதுவே முதல் முறை என்று வக்கீல்கள் தெரிவித்தனர்.



Tags:    

மேலும் செய்திகள்