மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் இரட்டை தேரோட்டம்
பொன்னமராவதி அருகே மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் இரட்டை தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்
பொன்னமராவதி அருகே அம்மன்குறிச்சியில் பிரசித்தி பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் இரட்டை தேரோட்டம் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழாவையொட்டி கடந்த 9 நாட்களுக்கு முன்பு மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு காப்பு கட்டப்பட்டு தினமும் சுவாமி வீதியுலா நடைபெற்றது. இதில் அலங்கரிக்கப்பட்ட மீனாட்சி-சுந்தரேஸ்வரர் முக்கிய வீதிகளின் வழியாக திருவீதியுலா வந்தார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டகபடிதாரர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
இரட்டை தேரோட்டம்
விழாவின் சிகர நிகழ்ச்சியான இரட்டை தேரோட்டம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. முதல் தேரில் மீனாட்சி- சுந்தரேஸ்வரரும், 2-வது தேரில் மீனாட்சியும் வைத்து இரண்டு தேர்களையும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர். முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்த தேரானது மீனாட்சி- சுந்தரேஸ்வரர் கோவிலின் எதிரே நிலை நின்றது. இதில் பக்தர்கள் வழிநெடுகிலும் கோலமிட்டு தேரினை வரவேற்றனர்.
இதில் சொக்கநாதபட்டி, அம்மன்குறிச்சி, ஆவிக்கோன்பட்டி, அம்மாபட்டி, ஆலவயல், பிடாரம்பட்டி, கண்டியாநத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு மீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசனம் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னமராவதி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் செய்து இருந்தனர்.