அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு வாக்களித்தது போதும்-அன்புமணி ராமதாஸ் பேச்சு
நாம் கால காலமாக அ.தி.மு.க., தி.மு.க. என மாறி மாறி வாக்களித்து விட்டோம். கடந்த 57 ஆண்டுகளுக்கும் மேலாக தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு வாக்களித்து விட்டோம் என்று வாக்காளர்கள் மத்தியில் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
சென்னை,
பா.ஜனதா கூட்டணியில் தர்மபுரி தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் சவுமியா அன்புமணியை ஆதரித்து, பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பாலக்கோடு பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது வாக்காளர்கள் மத்தியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-
தர்மபுரி தொகுதியில் 50 ஆண்டுகளுக்கு பிறகு பெண் வேட்பாளர் போட்டியிடுகிறார். பட்டம் பெற்றவர், ஐ நா சபைக்கு சென்று பெண் உரிமைகளை பற்றி, பெண் குழந்தைகளை பற்றி குரல் கொடுத்தவர், உங்களில் ஒருவர். எங்கே பெண்களுக்கு பிரச்சினை என்றாலும், என்னை விட அவர் தான் முதலில் சென்று இருப்பார். இவர் போன்ற வேட்பாளர் தானே உங்களுக்கு தேவை. அவர் பெண்கள் உரிமைக்காக பேசுவார்.
மாற்றம் நமது வாழ்வில் வரவேண்டும். நாம் கால காலமாக அ.தி.மு.க., தி.மு.க. என மாறி மாறி வாக்களித்து விட்டோம். கடந்த 57 ஆண்டுகளுக்கும் மேலாக தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு வாக்களித்து விட்டோம். நமது வாழ்க்கை அப்படியே இருக்கிறது. எந்த விடியலும் இல்லை. உணர்வுப்பூர்வமாக உங்களின் முன்னேற்றத்திற்காக நாங்கள் அரசியல் செய்கிறோம். நல்ல முடிவெடுங்கள், இது காலத்தின் கட்டாயம்.
அ.தி.மு.க. வாக்காள பெருமக்களுக்கு எனது அன்பான வேண்டுகோள். இந்த தேர்தலில் உங்களின் வாக்குகளை வீணாக்க வேண்டும். இந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக வரப்போவதில்லை, பிரதமராக வரப்போவது இல்லை. ஆகையால் இந்த முறை எங்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்" இவ்வாறு அவர் பேசினார்.