தளி
உடுமலை அருகே சந்தனக்கருப்பனூரில் பராமரிப்பு இல்லாத பலநோக்கு மையத்தை சீரமைக்க வேண்டும் என்று ெபாதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல்நோக்கு மையம்
உடுமலையை அடுத்த ஜல்லிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சந்தனக்கருப்பனூர் உள்ளது. இங்கு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் பல்நோக்கு மையம் கட்டப்பட்டது. அந்த மையத்தில் பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. பராமரிப்பு இல்லாததால் கட்டிடத்தின் உறுதித் தன்மை கேள்விக்குறியாகி உள்ளது.
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுமக்கள் திருமணம், காதணிவிழா உள்ளிட்ட விசேஷ நிகழ்வுகளை நடத்துவதற்காக கட்டிடம் கட்டித் தருமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் பேரில் சில வருடங்களுக்கு முன்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்நோக்கு மையம் கட்டித் தரப்பட்டது.
கட்டணம்
இந்த மையத்தில் நிகழ்ச்சி நடத்த கட்டணம் வசூலிக்கும் ஊராட்சி மன்ற நிர்வாகம் கட்டிடத்தை பராமரிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாக கட்டிடம் சேதம் அடைந்து வருவதுடன் அதன் உறுதித் தன்மையும் கேள்விக்குறியாகி வருகிறது. கட்டிடத்தில் பொருத்தப்பட்டுள்ள மின் இணைப்பு உபகரணங்கள் அபாயகரமான முறையில் தொங்கிக் கொண்டு உள்ளது. இதனால் கட்டிடத்திற்கு முன்பு உள்ள தரைத்தளத்தில் விளையாடச் செல்லும் குழந்தைகளுக்கு ஆபத்து நேரிடும் சூழல் உள்ளது.
மழை காலங்களில் மின் கசிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது. எனவே பல் நோக்கு மையத்தை புதுப்பிக்க வேண்டும்.அத்துடன் அபாயகரமான முறையில் தொங்கிக் கொண்டுள்ள மின் உபகரணங்களை சீரமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.