முகமூடி கொள்ளையர்களை விரட்டிய நாய்கள்
களக்காட்டில் முகமூடி கொள்ளையர்களை விரட்டிய நாய்கள்- சமூக வலைதளங்களில் பரவும் காட்சிகளால் பரபரப்பு
களக்காடு:
களக்காடு கோவில்பத்து பகுதியில் நேற்று முன்தினம் இரவில் முகமூடி அணிந்த 3 கொள்ளையர்கள் சுற்றித்திரிந்தனர். அவர்கள் அங்குள்ள வீடுகளின் கதவை உடைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் நாய்கள் சத்தம் போட்டு விரட்டியதால் அவர்கள் தப்பி சென்றுவிட்டனர்.
இந்த காட்சிகள் அப்பகுதி வீடுகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது, கொள்ளையர்கள் நடந்து வரும் காட்சி, அவர்களை நாய்கள் துரத்தும் காட்சிகள் சமூக வலை தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கொள்ளையர்களை நாய்கள் விரட்டியபோது ஒரு நாயின் மீது கல் எறிந்ததில், அது கண்ணில் பட்டு காயம் அடைந்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவில்பத்தில் டீக்கடை உரிமையாளர் வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. மேலும் பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவங்களும் நடந்துள்ள நிலையில் தற்போது முகமூடி கொள்ளையர் நடமாடிய காட்சிகள் வெளிவந்துள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
களக்காடு போலீசார் இரவு நேரங்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.