தூத்துக்குடியில்வடிகால்களில் மழைநீர் சீராக செல்கிறதா?: கனிமொழி எம்.பி ஆய்வு

தூத்துக்குடியில் நேற்று கனமழை பெய்த நிலையில் வடிகால்களில் மழைநீர் சீராக செல்கிறதா? என்று கனிமொழி எம்.பி ஆய்வு செய்தார்.

Update: 2022-11-29 18:45 GMT

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் வடிகால்களில் மழைநீர் சீராக வெளியேறுகிறதா? என செவ்வாய்க்கிழமை கனிமொழி எம்.பி. ஆய்வு செய்தார். அடைப்புகளை உடனடியாக அப்புறப்படுத்தி மழைநீர் தேங்காமல் விரைவாக வழிந்தோட நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

மழைநீர் தேங்கியது

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று காலையில் பரவலாக பலத்த மழை பெய்தது. குறிப்பாக தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் வழக்கம் போல் மழைநீர் தேங்கி கிடந்தது

பழைய மாநகராட்சி அலுவலகம், பாளையங்கோட்டை ரோடு உள்ளிட்ட இடங்களில் சாலைகள், தாழ்வான பகுதிகள், காலியிடங்களில் மழைநீர் தேங்கி கிடந்தது. இந்த மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வந்தது. அதே போன்று மழை காரணமாக தற்காலிக பஸ் நிலையம் சகதியாக காட்சி அளித்தது. இதனால் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.

கனிமொழி எம்.பி. ஆய்வு

இந்த நிலையில், நேற்று தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மழைநீர் தேங்கி கிடந்த பகுதிகளில் கனிமொழி எம்.பி., ஆய்வு மேற்கொண்டார். மேலும் மழைநீரை விரைவாக வெளியேற்ற சம்மந்தப்பட்ட அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டார். மேலும், மழைநீர் வழிந்தோட அமைக்கப்பட்டுள்ள வடிகால்களில் சீராக தண்ணீர் வெளியேறுகிறதா? என்பதையும் அவர் ஆய்வு செய்தார்.

குறிப்பாக தூத்துக்குடி தனசேகர் நகர், முத்தம்மாள் காலனி, ரகுமத் நகர் உள்ளிட்ட பகுதிகளில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

சில இடங்களில் வடிகால்களில் ஏற்பட்டு உள்ள அடைப்புகளை உடனடியாக அகற்றி தண்ணீர் விரைவாக வழிந்தோட நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். அவருடன் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, சண்முகையா எம்.எல்.ஏ ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்