முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கவில்லை - சென்னை ஐகோர்ட்டில் அண்ணாமலை தரப்பில் விளக்கம்
முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று சென்னை ஐகோர்ட்டில் அண்ணாமலை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
சென்னை,
கோவை கோட்டைமேடு பகுதியில் கடந்த 23-ந்தேதி அதிகாலையில் நடந்த கார் வெடிப்பு சம்பவம், தமிழகமெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில் ஜமேஷா முபின் (வயது 29) என்ற என்ஜினீயரிங் பட்டதாரி பலியானார்.
இந்த வழக்கில் ஜமேஷ் முபினுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிற முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), முகமது ரியாஸ் (27), பிரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (27) ஆகிய 5 பேரை சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டப்பிரிவின் (உபா) கீழ் போலீஸ் கைது செய்தது.
கோவையில் கார் வெடிப்பு சம்பவத்துக்கு பாரதிய ஜனதாவினர் உள்பட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் பாரதிய ஜனதா சார்பில் கோவையில் வருகிற 31-ந்தேதி (திங்கட்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தது.
பாரதிய ஜனதாவின் முழு அடைப்பு போராட்டத்தை தடை விதிக்க வேண்டும் எனவும் சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும் என்று கோவையைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இது போன்ற முழு அடைப்பு போராட்டம் நடத்த கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் இதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
அதனைதொடர்ந்து பாஜக தலைவர் அண்ணாமலை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முழு அடைப்பு போராட்டம் பாஜக தேசிய செயற்க்குழு உறுப்பினர் மூலமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, மாநில தலைமையால் அழைப்பு விடுக்கவில்லை எனவும் அதை ஆதரிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி அக்.31-ல் பாஜக பந்த் நடத்தினால் காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் என்று உத்தரவிட்டு, வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்காமல் விசாரணையை நவ.1-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.