கோவில்களில் வழங்கப்படும் அன்னதானம் மனநிறைவு அளிக்கிறதா?

கோவில்களில் வழங்கப்படும் அன்னதானம் மனநிறைவு அளிக்கிறதா? என்பது பற்றி பக்தர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Update: 2022-10-28 20:21 GMT

கோவில்களில் அன்னதானம்

'தானத்தில் சிறந்தது அன்னதானம்', 'போதும் என்ற மனப்பான்மையை அளிப்பது அன்னதானம் மட்டுமே', உண்மையில் இது வெறும் தத்துவமல்ல. இதனை நம் அனுபவப் பூர்வமாகவே பார்க்க முடியும். பசியோடு இருப்பவருக்கு உணவளிப்பது சிறந்த மனித பண்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆன்மிகத்தில் ஈடுபடுபவர்களுக்கு உணவு அளிப்பது நம் கலாசாரத்தில் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. மேலைநாடுகளில் உணவு வங்கிகள் மூலமும் உறையுள்கள் மூலமும் உணவு இல்லாதவருக்கு உணவு வழங்கப்படுகிறது.

அந்தவகையில், தமிழகத்தில் கடந்த 2002-ம் ஆண்டு மார்ச் 23-ந்தேதி மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் அன்னதான திட்டத்தை அப்போதைய முதல்-அமைச்சர் மறைந்த ஜெயலலிதா தொடங்கி வைத்தார். ஆன்றோர்கள், சான்றோர்கள், பக்தர்கள் வரவேற்பை ெபற்று படிப்படியாக அதிகரிக்கப்பட்டு தற்போது 754 கோவில்களில் அன்னதான திட்டம் செயல்படுத்தப்படுகிறது. குறைந்தது 25 நபர்களுக்கும் அதிகபட்சம் 200 நபர்களுக்குமாக அன்னதானம் வழங்கப்படுகிறது. ஒரு இலைக்கு ரூ.35 செலவிடப்படுகிறது. தொடர்ந்து 2012-ம் ஆண்டு செப்டம்பர் 13-ந்தேதி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

நாள் முழுவதும் உணவு

தமிழக சட்டசபையில் 2021-2022-ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறையின் மானிய கோரிக்கையின் போது, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆகிய 3 கோவில்களிலும் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதனை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு செப்டம்பர் 16-ந்தேதி தொடங்கி வைத்தார். அதன்படி காலை 8 மணியில் இருந்து இரவு 10 மணி வரை பக்தர்களுக்கு உணவு பரிமாறப்படுகிறது. தற்போது ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில், திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில்களிலும் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதேபோல் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் உள்ள கோவில்களிலும் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் நிறைவாக இருக்கிறதா? என்பது பற்றி பக்தர்கள் உள்ளிட்டோரின் கருத்துகள் வருமாறு;-

ஒரு வேளை பசியை போக்குகிறது

பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோவிலில் அன்னதானம் சாப்பிட்ட காந்தி நகரை சேர்ந்த சகுந்தலா:-

நான் வீட்டு வேலை செய்து வருகிறேன். இந்த பகுதியில் வீட்டு வேலை செய்ய வந்தால், மதியம் கோவிலில் அன்னதானம் நடைபெறும்போது வந்து சாப்பிட்டு செல்வேன். இந்த உணவு சுவையாக உள்ளது. கோவிலில் விசேஷ நாட்களில் பக்தர்களும் அன்னதானத்தை சாப்பிடுவார்கள். மேலும் வீட்டில் பராமரிப்பின்றி வெளியே சுற்றித்திரியும் முதியவர்கள், யாசகம் பெறுபவர்கள் தினமும் இங்கு வந்து சாப்பிட்டு செல்கின்றனர். அவர்களின் ஒரு வேளை பசியை இந்த கோவிலின் அன்னதானம் போக்குகிறது. மேலும் உணவு மீதம் இருந்தால் இரவு வேளைக்கு சாப்பிட அவர்கள் வாங்கி செல்கின்றனர்.

மிகவும் பயனுள்ளது

அரும்பாவூரை சேர்ந்த தொழிலாளி செல்வராஜ்:- நான் சொந்த வேலை காரணமாக பெரம்பலூருக்கு வந்தால், மதனகோபாலசுவாமி கோவிலுக்கு தவறாமல் வந்து பெருமாளை தரிசனம் செய்வேன். மதியம் கோவிலில் நடைபெறும் அன்னதானத்தில் உணவு சாப்பிட்டு செல்வேன். அன்னதானத்தில் சாதம், சாம்பார், ரசம், ஒரு கூட்டு அல்லது பொறியல், மோர், ஊறுகாய் ஆகியவை வழங்கப்படுகிறது. கடைகளில் ரூ.50-க்கு குறையாமல் சாப்பிட முடியாது. கோவிலில் தமிழக முதல்-அமைச்சரின் அன்னதானம் திட்டம் பக்தர்களுக்கு மட்டுமின்றி, என்னை போன்றவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் அன்னதானம் சாப்பிட்ட பெண் பக்தரான பெரம்பலூரை சேர்ந்த செல்வி:- கோவிலுக்கு வந்தால் மதியம் அம்மனை தரிசனம் செய்துவிட்டு அன்னதானம் சாப்பிட்டு விட்டுதான் வீட்டிற்கு செல்வேன். அன்னதானம் சுவையாக உள்ளது. கோவிலுக்கு வரும் வெளியூர் பக்தர்களும் அன்னதானம் சாப்பிட்டு செல்கின்றனர். கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். அவர்களில் பலர் அன்னதானம் சாப்பிட விரும்புகின்றனர். எனவே அன்னதானம் வழங்கப்படுபவர்களின் எண்ணிக்கையை சற்று அதிகரிக்கலாம்.

சுவையாக உள்ளது

அன்னதானம் சாப்பிட வந்த கடலூர் மாவட்டம், தெம்மூரை சேர்ந்த பக்தர் சின்னப்பிள்ளை:- வேண்டுதலை நிறைவேற்றும் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலுக்கு மாதந்தோறும் வருவேன். அப்போது நான், அம்மனை தரிசனம் செய்து விட்டு கோவிலில் வழங்கப்படும் அன்னதானத்தை சாப்பிட்டு செல்வது வழக்கம். கோவிலில் தமிழக அரசு சுவையாக அன்னதானம் போடும்போது கடைகளில் காசு கொடுத்து மதிய உணவு சாப்பிடுவது வீண் செலவு. சில பக்தர்கள் கோவிலில் அன்னதானம் சாப்பிடுவதற்கு கூச்சப்படுகிறார்கள். அம்மன் வழங்கும் விருந்தாக எண்ணி பக்தர்கள் அன்னதானம் சாப்பிட்டு செல்ல வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்