'மருத்துவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும்'

கடவுளை போன்றவர்கள் என்பதால், மருத்துவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று கலெக்டர் விசாகன் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2023-01-24 17:06 GMT

சுகாதார பேரவை கூட்டம்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில், மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கி பேசினார்.

அவர் பேசுகையில், சுகாதாரத்துறையை மேம்படுத்தும் வகையில் கருத்துகளை கேட்கவும், சுகாதாரத்துறையில் மக்களுக்கான திட்டங்களை பரிந்துரை செய்யவும் பேரவை கூட்டம் நடத்தப்படுகிறது. இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்படும் கோரிக்கைகள் அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். கொரோனா காலத்தில் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டது. மருத்துவர்கள் அனைவரும் கடவுளை போன்றவர்கள் என்பதால் இன்னும் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றார்.

எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு

கூட்டத்தில் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. பேசுகையில், பழனி மலைப்பகுதியில் வசிக்கும் மக்கள் மருத்துவ வசதிக்காக செல்ல அதிக நேரம் ஆகிறது. எனவே 20 ஆயிரம் மக்களுக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் என்பதை மாற்றி, மலைப்பகுதிகளுக்கு சில தளர்வுகள் அளிக்க வேண்டும், என்றார்.

காந்திராஜன் எம்.எல்.ஏ. பேசுகையில், வேடசந்தூர் தொகுதியில் பல்வேறு பகுதிகளில் துணை சுாகாதார நிலையங்கள் அமைக்க வேண்டும். மேலும் துணை சுகாதார நிலையங்களை மேம்படுத்த வேண்டும் என்றார்.

கூட்டத்தில் திண்டுக்கல் மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, மாவட்ட ஊராட்சி தலைவர் பாஸ்கரன், சுகாதாரத்துறை இயக்குனரக இணை இயக்குனர் சண்முகசுந்தரம், பொது சுகாதாரத்துறை இணை இயக்குனர் பூமிநாதன், துணை இயக்குனர் அனிதா, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜஸ்ரீ மற்றும் வட்டார மருத்துவ அலுவலர்கள், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள், ஊராட்சி தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்