டாஸ்மாக் கடை அமைக்க கூடாது

மதுக்கரை மார்க்கெட் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க கூடாது என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.

Update: 2022-10-10 18:45 GMT

கோவை

மதுக்கரை மார்க்கெட் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க கூடாது என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் சமீரன் தலைமை தாங்கி, கோரிக்கை மனுக்களை வாங்கினார். இதில் நடைபாதை வசதி, முதியோர் ஓய்வூதிய தொகை, புதிய ரேஷன் கார்டு உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து மனுக்கள் அளிக்கப்பட்டு இருந்தது. அவற்றை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி, உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

கூட்டத்தில், வலை மற்றும் துடுப்புடன் வந்து மேட்டுப்பாளையம் வட்ட மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் அளித்த மனுவில், மேட்டுப்பாளையம் வட்ட மீனவர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள அனைவரும் பெள்ளாதி குளத்தில் கடந்த 1992-ம் ஆண்டு முதல் மீன் பிடித்து வருகிறோம். ஆனால் திடீரென ஒரு தரப்பினர் எங்களை மீன் பிடிக்க விடாமல் தடுத்து வருகின்றனர். இதுகுறித்து ஏற்கனவே மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே குளத்தில் மீன் பிடிக்க எங்களை அனுமதிக்க வேண்டும். இல்லையென்றால் வலை, துடுப்பு உள்ளிட்டவற்றை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைப்போம் என்று கூறப்பட்டு இருந்தது.

குறைந்தபட்ச கூலி

கோவை மாவட்ட தூய்மை பணி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் அளித்த மனுவில், கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், குடிநீர் வினியோகிப்பாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.120 மட்டுமே வழங்கப்படுகிறது. மாதம் முழுவதும் பணியாற்றினாலும் ரூ.3,200 மட்டுமே ஊதியமாக கிடைக்கிறது. எனவே விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பல்வேறு இன்னல்களை சந்திக்க வேண்டியுள்ளது. எனவே தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

நாம் தமிழர் கட்சியினர் அளித்த மனுவில், கோவை மாநகராட்சி பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பயிற்சி மேற்கொண்டுள்ளனர். அரசு பள்ளி வளாகத்தில் இதுபோன்ற அமைப்புகள், கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்க கூடாது என்று கூறப்பட்டு இருந்தது.

டாஸ்மாக் கடை

மதுக்கரை பகுதி பொதுமக்கள் அளித்த மனுவில், மதுக்கரை மார்க்கெட் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இங்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வாரச்சந்தை நடைபெறும். மேலும் அருகில் அரசு ஆஸ்பத்திரி, பள்ளிகள் உள்ளன. இங்கு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டால் மாணவர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவார்கள். எனவே டாஸ்மாக் கடை திறப்பதை கைவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இம்மிடிபாளையம் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் அளித்த மனுவில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் பள்ளி திறந்ததும் மாணவர்களுக்கு காலணி, பென்சில், புத்தகப்பை உள்பட 14 வகையான பொருட்கள் வழங்க வேண்டும். ஆனால் பள்ளிகள் திறக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இந்த பொருட்கள் வழங்கப்படாமல் உள்ளது.

இதை உடனடியாக வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்