குழந்தைகளுக்கு காய்ச்சல் இருந்தால் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்
குழந்தைகளுக்கு காய்ச்சல் இருந்தால் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று சுகாதார பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து தெரிவித்தார்.
குழந்தைகளுக்கு காய்ச்சல் இருந்தால் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று சுகாதார பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து தெரிவித்தார்.
இணை இயக்குனர் ஆய்வு
திருப்பத்தூர் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் நோயாளிகளுக்கு கனிவுடன் சிகிச்சை அளிக்க டாக்டர்களை அறிவுத்தினார். ஆஸ்பத்திரிக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், என்னென்ன வசதிகள் தேவை என்பது குறித்தும் டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
அப்போது மருத்துவ அலுவலர் சிவக்குமார், டாக்டர் பிரபாகர் உளிளிட்ட பலர் உடனிருந்தனர்.
அதைத்தொடர்ந்து இணை இயக்குனர் மாரியப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்
தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல் பரவி வருகிறது. நமது மாவட்டத்தில் காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது. சளி, இருமல், காய்ச்சல் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பொதுமக்கள் சிகிச்சை பெற வேண்டும். போலி டாக்டர்களிடம் சென்று சிகிச்சை பெற வேண்டாம். ஆரம்ப நிலையிலேயே அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தால் காய்ச்சலை குணப்படுத்தி விடலாம்.
மேலும் கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக பொதுமக்கள் வீட்டிற்குள்ளே இருந்ததால் காய்ச்சல் பரவல் தெரியவில்லை. தற்போது காய்ச்சல், வைரஸ் காய்ச்சல், டைபாய்டு போன்ற நோய்கள் வேகமாக பரவும். இதனால் பள்ளி குழந்தைகள், வேலைக்கு செல்பவர்களுக்கு காய்ச்சல் ஏதும் இருந்தால் வீட்டில் இருக்க வேண்டும். பள்ளியில் ஒரு குழந்தைக்கு காய்ச்சல் இருந்தால் மற்ற குழந்தைகளுக்கும் வேகமாக பரவும். இதனால் காய்ச்சல் உள்ள குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். காய்ச்சல் போன்ற நோய்களுக்கு அரசு ஆஸ்பத்திரியில் தேவையான மருந்துகள் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.