''அதிக பணத்துக்கு ஆசைப்பட்டு மோசடி நிறுவனங்களில் முதலீடு செய்யாதீர்கள்" ஈரோடு போலீசார் பொதுமக்களிடம் விழிப்புணர்வு
‘‘அதிக பணத்துக்கு ஆசைப்பட்டு மோசடி நிறுவனங்களில் முதலீடு செய்யாதீர்கள்"
அதிக பணத்துக்கு ஆசைப்பட்டு மோசடி நிறுவனங்களில் முதலீடு செய்யாதீர்கள் என்று ஈரோடு போலீசார் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
விழிப்புணர்வு
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா மற்றும் கனி மார்க்கெட் ஜவுளிச்சந்தை பகுதியில் ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மேனகா தலைமையிலான போலீசார் மக்களிடம் கவர்ச்சிகரமான திட்டங்களை பார்த்து, அதிக பணத்துக்கு ஆசைப்பட்டு மோசடி நிறுவனங்களில் முதலீடு செய்து தங்கள் பணத்தை இழக்க கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.
அதில், சமீப காலமாக கவர்ச்சிகரமான திட்டங்கள் மூலம் பண இரட்டிப்பு, ஏல சீட்டு, வீட்டுமனை திட்டங்களை மோசடி நிறுவனங்கள் அறிவித்து பணத்தை பொதுமக்களிடம் இருந்து பெற்று முதிர்வு காலத்துக்கு பின்னரும் பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி, பல நிறுவனங்கள் மோசடியில் ஈடுபட்டு வருகிறது.
கவர்ச்சிகரமான திட்டங்கள்
எனவே, கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவிக்கும் நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியிடம் பதிவு செய்யப்பட்டுள்ளதா?, 12.5 சதவீதத்துக்கும் கூடுதலாக இல்லாமல் வட்டி விகிதம் உள்ளதா?, முதலீடு முதிர்வு காலம் 5 ஆண்டுகளுக்கு மேல் உள்ளதா?, முதலீடு செய்யும் பணத்துக்கு முறையான ரசீது வழங்கப்படுகிறதா?, கடன் ஒப்பந்த நகல் வழங்கப்படுகிறதா? என்பதை பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து உறுதிதன்மை இருந்தால் மட்டுமே தங்களது பணத்தை முதலீடு செய்ய வேண்டும்.
சந்தேகம் இருந்தால் ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தை 0424 2256700, 0424 2256700 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து, தங்களது சந்தேகங்களை கூறி போலீசாரிடம் நிவர்த்தி பெறலாம்' என்று துண்டு பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.