மழைக்காலங்களில் மின்மாற்றிகள், மின் கம்பங்கள் அருகே செல்ல வேண்டாம்: அதிகாரி தகவல்

மழைக்காலங்களில் மின்மாற்றிகள், மின் கம்பங்கள் அருகே செல்ல வேண்டாம் என பொதுமக்களுக்கு மேற்பார்வை பொறியாளர் அறிவுறுத்தி உள்ளார்.

Update: 2023-09-30 17:43 GMT

தொடக்கூடாது

மழைக்காலங்களில் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய மின்சார பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து கரூர் மின்பகிர்மான வட்டம், மேற்பார்வை பொறியாளர் அசோக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மழைக்காலங்களில் மின்மாற்றிகள், மின் கம்பங்கள், மின்பகிர்வு பெட்டிகள், ஸ்டே வயர்கள் ஆகியவற்றின் அருகே செல்ல வேண்டாம். மழையாலும், பெருங்காற்றாலும் அறுந்து விழும் மேல்நிலை மின்சார கம்பி அருகே செல்லக்கூடாது.

அறுந்து விழுந்த மின் கம்பியை தொடக்கூடாது. உடனடியாக மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மின்சார பெட்டி அருகில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும்போது அதன் அருகில் செல்ல வேண்டாம். இடி அல்லது மின்னலின்போது வெட்ட வெளியில் இருக்க கூடாது. அப்போது உடனடியாக கான்கீரிட் கூரையிலான பெரிய கட்டிடம், வீடு போன்ற பெரிய கட்டிடங்களிலோ, உலோகத்தால் மேலே மூடப்பட்ட பஸ், கார், வேன் போன்ற வாகனங்களிலோ தஞ்சமடைய வேண்டும்.

தாழ்வான பகுதிகள்

குடிசை வீட்டிலோ, மரத்தின் அடியிலோ, பஸ் நிறுத்த நிழற்குடையின் கீழோ, தஞ்சம் புக வேண்டாம். இடி அல்லது மின்னலின்போது தஞ்சம் அடைய அருகில் எதுவும் இல்லாத பட்சத்தில் மின்கம்பிகள், மின் கம்பங்கள் மரங்கள் உலோக கம்பிவேலி போன்றவை இல்லாத தாழ்வான பகுதிகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.

தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளுக்கு செல்லக்கூடாது. இடி அல்லது மின்னலின் போது டிவி, மிக்சி, கிரைண்டர், கணினி மற்றும் தொலைபேசி போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம். திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில் நிற்க கூடாது. ஸ்டே கம்பி மற்றும் மின்கம்பங்களில் கொடி கயிறு கட்ட வேண்டாம். ஸ்டே கம்பி மற்றும் மின்கம்பத்தில் ஆடு, மாடு போன்ற விலங்கினங்களை கட்ட வேண்டாம்.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்