சாயக்கழிவு ஆலை அமைக்க அனுமதி வழங்கக்கூடாது: மத்திய, மாநில அரசுகளுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்
பரங்கிப்பேட்டை பகுதியில் சாயக்கழிவு ஆலை அமைக்க அனுமதி வழங்கக்கூடாது மத்திய, மாநில அரசுகளுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த பரங்கிப்பேட்டையில் சாயக்கழிவு ஆலை அமைப்பதற்கான பணிகளை தீவிரப்படுத்த சைமா எனப்படும் தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம் திட்டமிட்டிருக்கிறது. சுற்றுச்சூழலை சீரழிக்கும் இந்தத் திட்டத்திற்கு தொழில் வளர்ச்சி என்ற பெயரில் தமிழ்நாடு அரசின் ஆதரவை பெறும் முயற்சியில் சைமா அமைப்பு தீவிரமாக ஈடுபட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
ஒருபுறம் என்.எல்.சி. நிறுவனம் நிலத்தடி நீர்வளத்தையும், சுற்றுச்சூழலையும் சூறையாடிக் கொண்டிருக்கிறது. மற்றொருபுறம் கடலூர் சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள வேதி ஆலைகள் அவற்றின் நச்சுக்கழிவுகளை வெளியேற்றி சுற்றுச்சூழலையும், இயற்கை வளத்தையும் சிதைத்துக் கொண்டிருக்கின்றன. இன்னொருபுறம் சாயக்கழிவு ஆலை கடல்வளத்தையும், நிலத்தடி நீர்வளத்தையும் சுரண்டுவதற்கு அனுமதிக்கப்பட்டால் கடலூர் மாவட்டம் பாலைவனமாகிவிடும். அப்படி ஒரு நிலை ஏற்படுவதற்கு அரசே துணை போகக்கூடாது.
எனவே, பரங்கிப்பேட்டை பகுதியில் சாயக்கழிவு ஆலை அமைப்பதற்கான சைமா அமைப்பின் முயற்சிகளுக்கு தமிழக அரசு எந்த வகையிலும் ஆதரவளிக்கக் கூடாது. மாறாக, சைமாவின் சாயக்கழிவு ஆலைக்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியை மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.