செல்போன் பேசி கொண்டு பள்ளி வாகனத்தை ஓட்டக்கூடாது

செல்போன் பேசி கொண்டு பள்ளி வாகனத்தை ஓட்டக்கூடாது, என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஓட்டுனர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

Update: 2022-07-02 18:27 GMT

செல்போன் பேசி கொண்டு பள்ளி வாகனத்தை ஓட்டக்கூடாது, என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஓட்டுனர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

பள்ளி வாகனங்கள் ஆய்வு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் கீழ் 250 பள்ளி வாகனங்களும், அரக்கோணம் போக்குவரத்து அலுவலகத்தின் கீழ் 150 பள்ளி வாகனங்களும் என மொத்தம் 400-க்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அந்த வாகனங்களில் குழந்தைகளை ஏற்றி செல்லும்போது, கடைப்பிடிக்க வேண்டிய அரசின் வழிகாட்டுதலின்படி விதிமுறைகள் குறித்து ஆண்டுக்கு ஒரு முறை ஆய்வு செய்து, அனுமதி வழங்கப்படுகிறது.

அதன்படி நடப்பாண்டுக்கான ஆய்வுப்பணியை இன்று ராணிப்பேட்டையில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்து தொடங்கி வைத்தார். ஆய்வின்போது கலெக்டர் பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

அவர் கூறியதாவது:-

கவனமாக ஓட்ட வேண்டும்

தனியார் பள்ளிகளுக்கு பெற்றோர் தங்களின் குழந்தைகளை வாகனங்களில் அனுப்பி வைக்கின்றனர். ஆகவே வாகன ஓட்டுனர்கள் தான் அந்தப் குழந்தைகளுக்கு முழு முதற் பாதுகாப்பு அளிக்கக் கூடியவர்கள்.

குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிப்பது ஒவ்வொரு ஓட்டுனரின் தலையாய கடமை.

ஓட்டுனர்களின் ஏதோ ஒரு பிரச்சினையால் மனக்குழப்பத்தில் பஸ்களை ஓட்டக்கூடாது. வேகமாகவும் ஓட்டக்கூடாது. பஸ்களில் சிறிய குழந்தைகள் முதல் பெரிய மாணவர்கள் வரை பயணிக்கின்றனர்.

ஒவ்வொருவரின் பாதுகாப்பும் முக்கியமானது. ஆகவே மனதை ஒருநிலைப்படுத்தி, வாகனத்தைக் கவனமாக ஓட்ட வேண்டும்.

பழுதை நிவர்த்தி செய்ய வேண்டும்

பள்ளி குழந்தைகளை பாதுகாப்பாக வாகனங்களில் ஏற்றி இறக்க வேண்டும். பஸ்களை பின்புறமாக இயக்கும்போது பின்னால் யாரேனும் நிற்கிறார்களா? எனப் பார்த்து இயக்க வேண்டும்.

பெற்றோர் பஸ் டிரைவர்களை நம்பித்தான் குழந்தைகளை அனுப்பி வைக்கிறார்கள் என்பதை எப்போது மறந்து விடக்கூடாது.

கடந்த வருடம் எந்த வித பிரச்சினைகளுக்கும் உட்படாமல் நாங்கள் தெரிவித்த அனைத்துச் சாலை விதிமுறைகளையும் பின்பற்றியதால் புகார்கள் எதுவும் பதிவாகவில்லை.

விபத்தில்லாமல் பாதுகாப்பாக வாகனங்களை இயக்கிய ஓட்டுனர் மற்றும் நடத்துனர் அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம். நடப்பாண்டிலும் வாகனங்களை சிறப்பாக இயக்க வேண்டும்.

வாகனத்தில் ஏதேனும் பழுது இருந்தால் அதை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய வேண்டும்.

ஓட்டுனர்கள் கண் பார்வை திறனை அவ்வபோது பரிசோதனை செய்ய வேண்டும். செல்போன் பேசி கொண்டு பள்ளி வாகனத்தை ஓட்டக்கூடாது. சாலை விதிமுறைகளையும், சாலை குறியீடுகளையும் முறையாக மதித்து வாகனத்தை இயக்க வேண்டும். வாகனங்களை முறையாக பராமரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விதிமுறைகள்

ஆய்வின்போது பஸ்களின் நிறம், பள்ளியின் சின்னம், பள்ளியின் தொடர்பு செல்போன் எண், ஓட்டுனரின் இருக்கைையச் சுற்றி பாதுகாப்பு வளையம், படிக்கட்டுகள் தரை தளத்தில் இருந்து 250 செ.மீ உயரத்தில் இருக்க வேண்டும். அதிகளவு உயரம் இருக்கக் கூடாது. ஜன்னல் கதவுகள் 55×75 செ.மீ, அவசர கால ஜன்னல் 150× 120 செ.மீ இருக்க வேண்டும்.

ஜன்னல் ஓரத்தில் குறைந்தபட்சம் 3 பாதுகாப்பு கம்பிகள் அமைக்க வேண்டும். முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவி, அவசர காலத்தில் கதவை உடைக்கும் சுத்தி போன்றவைகள் வாகனங்களில் இருப்பதை, கலெக்டர் ஆய்வு செய்து உறுதி செய்தார்.

விபத்துக் காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும், தீத்தடுப்பு பயிற்சி குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

ஆய்வின்போது ராணிப்பேட்டை உதவி கலெக்டர் பூங்கொடி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம், ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, போக்குவரத்து ஆய்வாளர்கள் செங்குட்டுவேல், சிவகுமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் வடிவேல், வாலாஜா தாசில்தார் ஆனந்தன், ஓட்டுனா் பயிற்சி பள்ளி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்