5-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தி.மு.க.வினர் மவுன ஊர்வலம்: கருணாநிதி நினைவிடத்தில் முதல்-அமைச்சர் அஞ்சலி
கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
சென்னை,
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை மெரினாவில் அமைந்துள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அவரது சமாதியில், 'நவீன தமிழ்நாட்டின் சிற்பி கலைஞரின் 5-ம் ஆண்டு நினைவை போற்றுவோம்... ' என்ற வாசகத்துடன் பூ அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
மேலும் சென்னை அண்ணாசாலையில் உள்ள கருணாநிதி சிலை அருகே அவரது உருவப்படம் வைக்கப்பட்டிருந்தது. தமிழக முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் அங்கு வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர், அங்கிருந்து அவரது தலைமையில் மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடம் நோக்கி மவுன ஊர்வலம் புறப்பட்டது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் முன் வரிசையில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர் பொன்முடி, அமைச்சர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி. ஆகியோர் அணிவகுத்து சென்றனர்.
பின் வரிசையில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், அனிதா ராதாகிருஷ்ணன், மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டி.ஆர்.பி.ராஜா, தயாநிதி மாறன் எம்.பி., பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், தி.மு.க. இளைஞரணி துணை செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல், வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம், துணை செயலாளர் வி.பி.மணி, மாநகராட்சி மண்டல குழு தலைவர் எஸ்.மதன்மோகன் உள்பட நிர்வாகிகள் அணிவகுத்து வந்தனர்.தி.மு.க. தொண்டர்களும், மகளிரணியினரும் திரளாக திரண்டு வந்திருந்தனர்.
கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி
காலை 8.10 மணிக்கு தொடங்கிய மவுன ஊர்வலம் வாலாஜா சாலை வழியாக மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்துக்கு காலை 8.50 மணியளவில் வந்தடைந்தது. கருணாநிதி நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் உருக்கமாக காணப்பட்டார். அவரை தொடர்ந்து பேரணியில் பங்கேற்ற அமைச்சர்களும், முக்கிய நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினார்கள். தி.மு.க. துணை செயலாளர் கனிமொழி எம்.பி. நேரடியாக கருணாநிதி நினைவிடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தினார்.
முன்னதாக அண்ணா நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
மவுன ஊர்வலத்துக்கு முன்பு சோக கீதம் இசைத்தப்படி ரதம் போன்று தயாரிக்கப்பட்ட வாகனம் சென்றது. வழி நெடுகிலும் கருணாநிதியின் புகழை போற்றி விளம்பர தட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. ஊர்வல பாதையில் சாலையோரம் கருணாநிதி உருவம் பதித்த பிரமாண்ட பேனருடன் மேடைகள் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த மேடைகளில் திருவள்ளுவர், அவ்வையார், பெரியார், அண்ணா, பாரதியார் போன்று வேடமணிந்த மாணவர்களும், உயிர் எழுத்துக்களை தாங்கியபடியும் மாணவர்கள் நின்று ஊர்வலத்தை வரவேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் சேகர்பாபு செய்திருந்தார். மேலும் அவர், ஊர்வலத்தை ஒருங்கிணைத்தப்படி சென்றார்.
கோபாலபுரம் இல்லம், அண்ணா அறிவாலயம்
மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கோடம்பாக்கத்தில் உள்ள 'முரசொலி' அலுவலகத்துக்கு சென்றார். அங்கு அவர், மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். புதுப்பிக்கப்பட்ட 'முரசொலி' இணையதளத்தையும், செயலியையும் தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து அவர், சென்னை கோபாலபுரம் இல்லத்துக்கு சென்றார். அங்குள்ள கருணாநிதியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அப்போது அவரது சகோதரி செல்வி, சகோதரர் மு.க.தமிழரசு, மனைவி துர்கா ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் அமிர்தம் உள்பட குடும்ப உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
பின்னர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சி.ஐ.டி. காலனி இல்லத்துக்கு சென்றார். அங்கு அவரை கனிமொழி எம்.பி.யும், அவரது கணவர் அரவிந்தனும் இன்முகத்துடன் வரவேற்றனர். இதைத்தொடர்ந்து அவர், அங்குள்ள கருணாநிதி உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்துக்கு வருகை தந்தார். அங்குள்ள கருணாநிதியின் சிலைக்கு கீழே பூக்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினார். அவரை தொடர்ந்து அமைச்சர்களும், தி.மு.க. நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினார்கள்.
கி.வீரமணி
மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் பொருளாளர் குமரேசன், பிரசார குழு செயலாளர் வக்கீல் அருள்மொழி, துணை பொதுச்செயலாளர்கள் இன்பகனி, மதிவதினி ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.
ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா தலைமையில் அக்கட்சியினர் அஞ்சலி செலுத்தினார்கள். கவிஞர் வைரமுத்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
டெல்லி
டெல்லியில் உள்ள அண்ணா அறிவாலயத்திலும் கருணாநிதி நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது. அங்குள்ள அவரது சிலைக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். திருச்சி சிவா, என்.ஆர்.இளங்கோ உள்பட தி.மு.க. எம்.பி.களும் அஞ்சலி செலுத்தினார்கள்.
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் கருணாநிதியின் உருவப்படத்துக்கு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் தலைமையில் எம்.பி.க்கள் கிரிராஜன், வேலுச்சாமி, அப்துல்லா, பார்த்திபன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.