மத்திய அரசை கண்டித்து தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டம்

தூத்துக்குடியில் மத்திய அரசை கண்டித்து தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

Update: 2023-08-20 19:00 GMT

தூத்துக்குடியில் மத்திய அரசை கண்டித்து தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

உண்ணாவிரதம்

நீட் தேர்வை திணிக்கும் மத்திய அரசையும், தமிழக கவர்னரையும் கண்டித்து தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில் நேற்று தூத்துக்குடி சிதம்பரநகரில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

இளைஞர் அணி அமைப்பாளர்கள் (வடக்கு) மதியழகன், ராமஜெயம் (தெற்கு) ஆகியோர் தலைமை தாங்கினர்.

வடக்கு மாவட்ட செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், தெற்கு மாவட்ட செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடைத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்தனர்.

கனிமொழி எம்.பி

மாலையில் அனைவருக்கும் பழரசம் கொடுத்து உண்ணாவிரத போராட்டத்தை தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. முடித்து வைத்து பேசினார்.

அப்போது, அவர் கூறியதாவது:-

தி.மு.க. நீட் தேர்வு தேவை இல்லை என்று தொடர்ந்து போராடி வருகிறது. அதன் நீட்சியே இன்று உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. இது மாணவர்கள் போராட்டமாக, மக்கள் போராட்டமாக மாற வேண்டும்.

சிலர் நீட் தேர்வில் நம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று வருகின்றனர் என்று கூறுகிறார்கள். என்ன தடை வந்தாலும் எங்களால் தாண்ட முடியும். ஆனால் அந்த தடையை உருவாக்க உங்களுக்கு உரிமை இல்லை. அதற்காகத்தான் இந்த போராட்டம் நடக்கிறது. நீட் தேர்வால் மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் கவர்னர் எந்த சூழலிலும் நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்திட மாட்டேன் என்று கூறுகிறார். நம்முடைய கல்வி என்ற ஆயுதத்தை தட்டி பறிக்க நினைக்கிறார்கள். நம் பிள்ளைகள் எந்த கல்வியும் படிக்க முடியாத நிலைக்கு தள்ளுகிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் கீதாஜீவன்

போராட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில், 'தி.மு.க.வை பொறுத்தவரை தொடர்ந்து நீட் தேர்வை எதிர்த்து வருகிறோம். மத்திய அரசு தொடர்ந்து பழிவாங்கும் செயலில் ஈடுபடுகிறது. நீட் தேவை உள்ள மாநிலங்களில் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தான் சட்டத்தில் கூறப்பட்டு உள்ளது. அதன்படி சில மாநிலங்களில் நீட் அமல்படுத்தவில்லை' என்றார்.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில், 'மத்திய அரசு உள்நோக்கத்தோடு தமிழக அரசை வஞ்சிக்கிறது. பல்வேறு வகையில் நீட் தேர்வை கொண்டு வர முயன்றும், ஜெயலலிதா இருக்கும் வரை இங்கு நீட் வரவில்லை. எடப்பாடி பழனிசாமி வந்த பிறகு தான் தமிழகத்தில் அது நடைமுறைக்கு வந்தது. இதற்கு காரணம் அ.தி.மு.க தான்' என்றார்.

போராட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் உமரிசங்கர், ஆவின் தலைவர் சுரேஷ்குமார், தெற்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் அம்பாசங்கர், மாநில காங்கிரஸ் துணைத்தலைவர் ஏ.பி.சி.வி.சண்முகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ஆறுமுகம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் கரும்பன், கோவில்பட்டி யூனியன் தலைவர் கஸ்தூரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஒண்டிவீரன் படத்திற்கு மரியாதை

முன்னதாக தூத்துக்குடியில் சுதந்திர போராட்ட வீரர் ஒண்டி வீரன் நினைவு நாள் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி கலைஞர் அரங்கில் அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது உருவப்படத்துக்கு அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலை வகித்தார். இதில் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்