பாதயாத்திரைக்கு முன்பு தி.மு.க.வின் 2-வது ஊழல் பட்டியல் வெளியிடப்படும் -அண்ணாமலை பேட்டி

பாதயாத்திரைக்கு முன்பு தி.மு.க.வின் 2-வது ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என்றும், அதில் 300 பினாமிகளின் பெயர்கள் உள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Update: 2023-07-14 22:21 GMT

சென்னை,

சைதாப்பேட்டை கோர்ட்டில் அவதூறு வழக்கில் ஆஜராகிவிட்டு வெளியே வந்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

'தி.மு.க. பைல்ஸ்' பகுதி-1 ஏப்ரல் மாதம் வெளியிட்ட பிறகு ஆளுங்கட்சியில் பலருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. தி.மு.க.வின் முதல்-அமைச்சர் உள்பட அமைச்சர், எம்.பி.க்கள் அவதூறு வழக்கு வேறு, வேறு ரூபத்தில் அனுப்பி இருந்தார்கள். டி.ஆர்.பாலு அனுப்பிய அவதூறு வழக்கில் ஆஜராகி இருக்கிறோம். பா.ஜ.க.வின் ஊழலுக்கு எதிரான போராட்டம் அடுத்த கட்டம் நோக்கி சென்றுள்ளது. வாய்ப்பேச்சாக இல்லாமல், நீதிமன்றத்தில் அடுத்தகட்டமாக சந்திக்க வந்துள்ளோம்.

3-ம் தலைமுறை-முதல் தலைமுறை

சத்திய பிரமாணத்தில் 3 நிறுவனத்தில் மட்டும் பங்குதாரராக இருக்கிறேன். மற்ற நிறுவனத்தில் இல்லை என்று சொல்லியுள்ளார். டி.ஆர்.பாலு எங்கு இருக்கிறார்? அவர் மகன், மருமகள் எங்கு இருக்கிறார்? என்ற மொத்தமாக ரூ.10 ஆயிரம் கோடி குடும்ப சொத்து எப்படி வந்தது? என்று கேள்வியும் எழுப்பியுள்ளோம்.

ஆனால் சத்திய பிரமாணத்தில் அதை மறைத்து நீதிமன்றத்தை அவமதித்திருக்கிறார். வருகின்ற நாட்களில் தி.மு.க. பைல்ஸ் பகுதி-1-ல் சொல்லி இருக்கக்கூடிய குற்றச்சாட்டுகளுக்கு கோர்ட்டில் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளோம். தமிழ்நாட்டில் தற்போது 3-ம் தலைமுறைக்கும், முதல் தலைமுறைக்கும் சண்டை நடக்கிறது. இங்கு இருக்கக்கூடிய பலரும் (பா.ஜ.க.வினர்) முதல் தலைமுறையை சார்ந்தவர்கள். சுயமாக வந்து வேலையை செய்து நாட்டுக்கு நல்லது நடக்கவேண்டும் என்று நினைப்பவர்கள். தி.மு.க.வின் மொத்த குடும்பமே 3-வது தலைமுறை.

தமிழ்நாட்டில் இன்று யாரெல்லாம் முதல் தலைமுறை பட்டதாரிகள் இருக்கிறீர்கள், ஊழலை எதிர்க்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள், தமிழ்நாட்டில் மாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்கள் எல்லா முதல் தலைமுறை சொந்தங்களும் எங்களுடன் இணைய வேண்டும். இது ஊழலுக்கு எதிரான போராட்டம். இந்த யுத்தம் பெரிய யுத்தமாக இருக்கும். அதற்கு தயாராகத்தான் வந்திருக்கிறோம்.

மக்கள் சக்தி

நீதிபதியிடம் வேண்டுகோள் வைத்து, நாம் வைத்திருக்கும் குற்றச்சாட்டை நிரூபிக்க டி.ஆர்.பாலுவின் குடும்பம் அனைத்தும் கூண்டில் ஏறவேண்டும். வேற வேற கால கட்டத்தில் டி.ஆர்.பாலு, மகன் உள்பட அனைவரும் கூண்டில் ஏறவேண்டும். எங்களுடைய கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டும். அவர்களின் கேள்விக்கும் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளோம். இந்த போராட்டம் தொடர்ந்து நடக்கும். அடுத்த வழக்கு விசாரணை ஆகஸ்டு மாதம் 3-வது வாரம் கொடுத்து இருக்கிறார்கள். நடைபயணத்தில் ஒரு நாள் ஒத்தி வைத்துவிட்டு, மறுபடியும் ஆஜராகுவோம்.

நாங்கள் அமைச்சரை போல நள்ளிரவில் நெஞ்சுவலி என்று ஆஸ்பத்திரியில் அனுமதித்து, சம்பந்தம் இல்லாமல் சொல்பவர்கள் இல்லை. எல்லா நாளும் இங்கு நாங்கள் இருக்கிறோம். எல்லா கேள்விக்கும் பதில் சொல்லுவோம். முதல் தலைமுறை சற்று தட்டு தடுமாறி தான் ஜெயிக்கும். நேரடியாக ஜெயிக்க முடியாது. அந்த பக்கம் படை, பணம், அதிகாரம் பலம் இருக்கிறது. எங்களிடம் மக்கள் சக்தி மட்டுமே உள்ளது. அதை பா.ஜ.க. எவ்வளவு முக்கியமான சக்தி என்பதை காட்டும்.

பாதயாத்திரைக்கு முன்பு...

'தி.மு.க. பைல்ஸ்' பகுதி-2 தயாராக இருக்கிறது. அது பினாமி சொத்துகள். பினாமிகளின் பெயரே கிட்டதட்ட 300-க்கு மேல் வருகிறது. பினாமியின் பெயரை பொது வெளியில் வெளியிடுவதா? உறையிட்டு கவர்னரிடம் ஒப்படைப்பதா? போலீஸ் டி.ஜி.பி.யிடம் ஒப்படைப்பதா? லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைப்பதா? என்ற ஆலோசனையில் இருக்கிறோம். 'தி.மு.க. பைல்ஸ்' பகுதி-1-ல் 13 பேரின் சொத்து விவரம், அவர்கள் சம்பாதித்த சொத்து, பிரமாண பத்திரத்தில் அவர்கள் குறிப்பிடாதது ஆகியவற்றை சொல்லியுள்ளோம்.

'தி.மு.க. பைல்ஸ்' பகுதி-2-ல் (ஊழல் பட்டியல்) பினாமி பெயரில் அவர்கள் வாங்கி இருக்கக்கூடிய நிலம், நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. இதனை பாதயாத்திரைக்கு முன்பு வெளியிட வேண்டும். நிச்சயமாக நடக்கும். பாதயாத்திரை நடக்கும்போது 'தி.மு.க. பைல்ஸ்' பகுதி-3, 'தி.மு.க. பைல்ஸ்' பகுதி-4 வெளிவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்