டெண்டர் நோட்டீஸ் வழங்குவது தொடர்பாக மேயருடன் தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்குவாதம்
திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் டெண்டர் நோட்டீஸ் வழங்குவது தொடர்பாக மேயருடன் தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் டெண்டர் நோட்டீஸ் வழங்குவது தொடர்பாக மேயருடன் தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இ-சேவை மையம்
திருச்சி மாநகராட்சி சாதாரண கூட்டம் நேற்று மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் திவ்யா, மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு;-
39-வது வார்டு கவுன்சிலர் ரெக்ஸ்:- மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கனரக வாகனங்கள் மாநகருக்குள் வருவதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கடும் அவதி அடைந்து வருகின்றனர். சில நேரங்களில் விபத்து ஏற்படுகிறது. எனவே காலை 8 மணி முதல் 10 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை கனரக வாகனங்களை மாநகருக்குள் அனுமதிக்கக்கூடாது. அனைத்து வார்டுகளிலும் 3 இ-சேவை மையம் அமைக்க வேண்டும். கடந்த கூட்டத்தில் கவுன்சிலர்களுக்கு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு ரூ.5 லட்சம் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தேன். இதை தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு வளர்ச்சி திட்ட பணிகளுக்காக மாதம் ஒரு முறை ரூ.3 லட்சம் ஒதுக்குவதாக அறிவித்துள்ளது. அடுத்து வரும் நாட்களில் மாநகரில் நடக்கும் வளர்ச்சி திட்ட பணிகளில் இந்த பணிக்கான செலவு மாமன்ற நிதியில் இருந்து வழங்கப்பட்டது என்று விளம்பரப்படுத்த ஒப்புதல் அளிக்க வேண்டும்.
மீன்கள் செத்து மிதக்கின்றன
28-வது வார்டு கவுன்சிலர் பைஸ் அகமது:- எங்கள் பகுதியில் சாலைகள் மிகவும் குறுகலாக உள்ளன. எனவே பாதாள சாக்கடை பணிகள் தொடங்குவதற்கு முன்பாக பொதுமக்களுடன் கலந்து பேசி விரைந்து பணிகளை முடிக்க வேண்டும்.
14-வது வார்டு கவுன்சிலர் அரவிந்தன்:- எனது வார்டுக்கு உட்பட்ட என்.எஸ்.பி. ரோடில் மழைநீர் வடிகால் கட்டி சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன. எனவே புதியதாக மழைநீர் வடிகால் கட்டி பாதசாரிகள் செல்ல நடை மேடை அமைக்க வேண்டும். மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் மீன்கள் அதிக அளவில் செத்து மிதந்து வருகிறது. தெப்பக்குளத்தில் உள்ள பழைய தண்ணீரை அகற்றி, புதிதாக தண்ணீர் நிரப்ப வேண்டும்.
உதவிகள் செய்ய வேண்டும்
43-வது வார்டு கவுன்சிலர் செந்தில்:- எனது வார்டு பகுதிக்கு உட்பட்ட குறிஞ்சி நகர், விஸ்தரிப்பு பகுதி, பர்மா காலனி, நேதாஜி சாலை, ஸ்ரீராம் நகர் உள்ளிட்ட இடங்களில் குடிநீர் சரியாக வருவதில்லை அதனை உடனடியாக சரி செய்து தர வேண்டும். கடந்த 7-ந் தேதி எனது வார்டில் மாநகராட்சிக்கு உட்பட்ட பர்மா காலனி பகுதியில் உள்ள கிணற்றில் ஜெகநாத் (வயது 11) என்ற சிறுவன் விழுந்து இறந்தான். அந்த சிறுவனின் பெற்றோருக்கு மேயர் நேரில் சென்று ஆறுதல் கூறி உதவிகள் செய்ய வேண்டும்.
55-வது வார்டு கவுன்சிலர் ராமதாஸ்:- எனது வார்டில் குப்பைகள் அதிக அளவில் தேங்கி வருகிறது. இதனால் அந்த பகுதியில் நுண்ணுயிர் உர மையம் அமைக்க வேண்டும்.
பெயர் பலகை இல்லை
மேலும் அந்தந்த பகுதி வார்டு கவுன்சிலர்கள் பேசும்போது, தங்களது வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும். பெரும்பாலான பகுதிகளில் பெயர் பலகை இல்லை, வார்டு பகுதிகளில் குப்பை அள்ளுவதற்கு வழங்கப்பட்ட பேட்டரி வாகனங்களை பழுது நீக்குவதற்காக அனுப்பும் போது மாற்று வாகனங்கள் வழங்கப்பட வேண்டும். கோணக்கரை மின் மயானத்துக்கு செல்லும் சாலையில் ஒரு மின்விளக்கு அமைக்க வேண்டும். பால் பண்ணை முதல் துவாக்குடி வரை நெடுஞ்சாலை பகுதியில் பேரிக்காடு அதிகம் வைக்கப்பட்டுள்ளது. இது பகலில் தேவை. இரவு நேரங்களில் இதனால் விபத்துகள் ஏற்படுகிறது. ஆகவே இரவு நேரங்களில், அந்த பேரிகார்டுகளை அகற்ற வேண்டும். உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மாதந்தோறும் ஊதியம் வழங்க வேண்டும் என்றனர்.
இதற்கு பதில் அளித்து மேயர் பேசும்போது, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் திட்டம் செயலாக்கத்தில் உள்ளது. 25 பேட்டரி வாகனங்கள் வந்துள்ளன. 50 டாடா ஏசி வாகனங்கள் விரைவில் வர உள்ளன. இவை அனைத்தும் பயன்பாட்டுக்கு வரும் போது மாற்று வாகனங்கள் வழங்கப்படும். கவுன்சிலர்களுக்கு மாத ஊதியம் வழங்குவது குறித்து அரசு அறிவிக்கும் என்றார்.
கவுன்சிலர்- மேயர் வாக்குவாதம்
தொடர்ந்து நடைபெற்ற கூட்ட விவாதத்தில் 57-வது வார்டு கவுன்சிலர் முத்துச்செல்வம் பேசும் போது, தெப்பக்குளம் பகுதியில் கடைகளுக்கு விடப்பட்ட டெண்டருக்கு நோட்டீஸ் வழங்கப்படவில்லை. கூட்டத்தில் தீர்மானம் வைத்து டெண்டர் டிஸ்போசல் செய்யப்பட்டதா? என்று மேயரிடம் கேட்டார். அதற்கு மேயர் கூட்டத்தில் தீர்மானம் வைக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது. வெளிப்படை தன்மையோடு தான் அனைத்தும் நடந்துள்ளது என்றார். இது தொடர்பாக கவுன்சிலருக்கும், மேயருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கிடையே முத்து செல்வத்திற்கு ஆதரவாக கவுன்சிலர்கள் காஜாமலை விஜி, லீலா ஆகியோரும் பேசினர். இதனால் மாநகராட்சி கூட்டத்தில் கடும் கூச்சல் குழப்பம் நிலவியது. பின்னர் மேயர் அடுத்து வரும் நாட்களில் டெண்டர் நோட்டீஸ் வழங்கப்படும் என்றார்.