தி.மு.க. மீது அதிருப்தி ஏற்படும் போதெல்லாம் மொழி பிரச்சினையை கிளப்புகிறார்கள் -அண்ணாமலை தாக்கு
தி.மு.க. மீது அதிருப்தி ஏற்படும் போதெல்லாம் மொழி பிரச்சினையை கிளப்புகிறார்கள் -அண்ணாமலை தாக்கு.
சென்னை,
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கட்டாய இந்தியை புகுத்தி இன்னொரு மொழிப்போரை திணிக்காதீர் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரென்று அறிக்கை விடுத்திருக்கிறார். மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் இந்தியை கட்டாய பாடமாக அனுமதிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளதாக ஒரு தகவலை மேற்கோள்காட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
முதல்-அமைச்சரின் தமிழ்மொழி மீதான இந்த திடீர் கரிசனத்தை எண்ணி சிரிப்பதா?, அழுவதா? என்றே தெரியவில்லை. எப்போதெல்லாம் தி.மு.க.வின் மீது மக்களுக்கு அதிருப்தி அலை வீசுகிறதோ, எப்போதெல்லாம் ஊடகங்கள் கூட தி.மு.க.விற்கு எதிராக பேச தொடங்குகின்றனவோ அப்போதெல்லாம் மொழி பிரச்சினையை எழுப்புவது தி.மு.க.வின் திராவிட மாடல்.
தமிழ் மொழி தன்னைத்தானே காத்துக்கொள்ளும், கவலைப்பட வேண்டாம். காலத்தால் அழிக்க முடியாத தமிழ் மொழி, தி.மு.க.வை மட்டும் நம்பியிருப்பதாக நினைக்க வேண்டாம்.
தமிழை காத்தவர் நரேந்திர மோடி, தமிழை கட்டாய பாடமாக்கி பயிற்று மொழியாக்கியவர் பிரதமர் நரேந்திர மோடி. தமிழக மக்களை நீங்கள் தவறாக எடை போட வேண்டாம். அவர்களுக்கு தெளிவாக தெரியும், தமிழை அரசியலுக்காக யார் பயன்படுத்துகிறார்கள். தமிழ் மொழியை, உண்மையில் யார் காப்பாற்றிக்கொண்டு இருக்கிறார்கள் என்றெல்லாம் மக்கள் அறிந்திருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.