சேலத்தில் வீட்டில் இருந்த தி.மு.க. கவுன்சிலரை கொல்ல முயற்சி ஆயுதங்களுடன் வந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை
சேலத்தில் வீட்டில் இருந்த மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலரை 3 பேர் ஆயுதங்களுடன் வந்து கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்,
தி.மு.க. கவுன்சிலர்
சேலம் வின்சென்ட் வெங்கடேசபுரம் பகுதியை சேர்ந்தவர் சாந்தமூர்த்தி (வயது 35). இவர், குமாரசாமிப்பட்டி பகுதி தி.மு.க. செயலாளராகவும், மாநகராட்சி 14-வது வார்டு கவுன்சிலராகவும் இருந்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு 9.50 மணியளவில் அவர் குடும்பத்தினருடன் வீட்டில் சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது, மர்ம நபர்கள் அவரது வீட்டின் கதவை தட்டினர்.
உடனே கவுன்சிலர் சாந்தமூர்த்தி வெளியே வந்து பார்த்தபோது, 3 பேர் நின்று கொண்டிருந்தனர். பின்னர் அவர்களிடம் என்ன வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு உன்னை தான் பார்க்க வந்துள்ளோம். கதவை திறந்து வெளியே வந்து ேபசுமாறு தெரிவித்துள்ளனர். இதையடுத்து வார்டு மக்களின் பிரச்சினையாக இருக்குமோ? என்று நினைத்து அவர், கதவை திறந்து என்ன வேண்டும் என்று கேட்டார்.
கொல்ல முயற்சி
அப்போது, அந்த நபர்கள் கைகளில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்தனர். பின்னர் உன்னை கொலை செய்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறி கவுன்சிலர் சாந்தமூர்த்தியிடம் மிரட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வீட்டின் வெளியே சத்தம் கேட்பதை அறிந்து கவுன்சிலரின் குடும்பத்தினர் வெளியே வருவதை அறிந்த அந்த நபர்கள் வேகமாக அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றனர்.
இது குறித்து அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் கவுன்சிலர் சாந்தமூர்த்தி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, கவுன்சிலரை கொலை செய்ய வந்தது, ராம்நகர் ஓடை பகுதியை சேர்ந்த மணிகண்டன், சூர்யா உள்பட 3 பேர் என்பது தெரியவந்தது.
3 பேரை பிடித்து விசாரணை
இதையடுத்து அவர்களை அஸ்தம்பட்டி போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுபோதையில் 3 பேரும் கவுன்சிலரின் வீட்டிற்கு ஆயுதங்களுடன் சென்றுள்ளனர். சிலரின் தூண்டு தலின்பேரில் 3 பேரும் ஆயுதங்களுடன் சென்றிருப்பது தெரியவந்துள்ளது.
இருப்பினும், கவுன்சிலர் சாந்தமூர்த்திக்கும், அவர்களுக்கும் இடையே என்ன பிரச்சினை? முன்விரோதம் ஏதும் உள்ளதா? அல்லது கூலிப்படையை ஏவி கொலை செய்ய திட்டம் நடந்ததா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சேலத்தில் தி.மு.க. கவுன்சிலரை 3 பேர் ஆயுதங்களுடன் வந்து கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.