தி.மு.க. பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையத்தில் திரண்ட கிராம மக்கள்

நாட்டாமையை தாக்க முயன்ற தி.மு.க. பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, போலீஸ் நிலையத்துக்கு கிராம மக்கள் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-05-17 16:44 GMT

எரியோடு அருகே தங்கச்சியம்மாபட்டியில் காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலை ஊர் நாட்டாமை பாலுமகேந்திரன் என்பவர் நிர்வாகம் செய்து வருகிறார். இந்த கோவில் திருவிழா நடைபெற்று 10 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் கோவில் திருவிழா நடத்த கிராம மக்கள் ஏற்பாடு செய்து வந்தனர். இதற்கிடையே நேற்று முன்தினம் கோவிலுக்கு சென்ற ஊர் நாட்டாமை பாலுமகேந்திரனை அதே ஊரை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் உள்பட 4 பேர் வழிமறித்துள்ளனர். பின்னர் அவர்கள், திருவிழா நடத்த எதிர்ப்பு தெரிவித்தும், கோவிலை நிர்வாகம் செய்யக்கூடாது என்றும் தரக்குறைவாக பேசி நாட்டாமையை தாக்க முயன்றனர்.

இந்நிலையில் நாட்டமையை தரக்குறைவாக பேசி, திருவிழா நடத்த எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க. பிரமுகர் உள்பட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எரியோடு போலீஸ்நிலையத்தில் புகார் கொடுக்க ராமநாதபுரம், கோவிலூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் நேற்று திரண்டு வந்தனர். திண்டுக்கல்-கரூர் சாலையில் குண்டாம்பட்டி பிரிவு அருகே அவர்களை எரியோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலாயுதம், சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் கிராம மக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் ஊர் முக்கியஸ்தர்கள் மட்டும் போலீஸ்நிலையம் சென்று புகார் கொடுக்கும்படி போலீசார் அறிவுறுத்தினர். இதையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்