போலி நகைகளை வங்கியில் அடமானம் வைக்க முயன்ற தே.மு.தி.க. நிர்வாகி உள்பட 2 பேர் கைது

தங்க முலாம் பூசப்பட்ட நகைகளை அடமானம் வைக்க முயன்ற தே.மு.தி.க. நிர்வாகி மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-07-27 19:29 GMT

அரியலூர்-திருச்சி சாலையில் பாரத ஸ்டேட் வங்கி உள்ளது. இந்த வங்கியில் 153 கிராம் எடையுடைய 4 வளையல்களை அடமானம் வைத்து பணம் பெற 2 பேர் வந்தனர். ஒவ்வொரு வளையலும் சுமார் 40 கிராம் எடையில் இருந்ததால் நகை மதிப்பீட்டாளருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அந்த நகைகளை பரிசோதனை செய்தபோது அந்த வளையல்கள் தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகள் என்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வங்கி துணை மேலாளர் செந்தில்குமாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பின் அவர் வங்கி மேலாளர் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் அரியலூர் இன்ஸ்பெக்டர் சகாய அன்பரசு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் அரியலூர் அண்ணா நகரை சேர்ந்த துரைக்கண்ணுவின் மகன் மணிகண்டன் (வயது 39) என்பதும், இவர் தே.மு.தி.க. வடக்கு ஒன்றிய செயலாளர் என்பதும் தெரியவந்தது.

இவருடன் வந்தவர் அஸ்தினாபுரத்தை சேர்ந்த நண்பர் மணிமாறன் (39) என்பதும் தெரியவந்தது. பின்னர் அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 4 போலி தங்க வளையல்கள், 2 இருசக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள தே.மு.தி.க. நகர பொருளாளர் ரமேசை போலீசார் தேடி வருகின்றனர். இவர்கள் வேறு ஏதேனும் வங்கிகளில் இதுபோன்று மோசடியில் ஈடுபட்டார்களா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்