தி.மு.க. ஒன்றிய செயலாளர் உறவினா் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

பரமத்திவேலூரில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் உறவினர் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2023-08-03 18:45 GMT

பரமத்திவேலூர்

அமலாக்கத்துறை சோதனை

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சக்கரா நகர், ராஜாஜி தெருவில் வசித்து வருபவர் டயர் கடை மணி என்கிற காளியப்பன். இவர் பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலையில் டயர் கடை வைத்து நடத்தி வந்தார். ஆனால் தற்போது அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதால் வீட்டிலேயே தங்கி ஓய்வு எடுத்து வருகிறார்.

நேற்று மாலை 3 மணி அளவில் 12 பேர் கொண்ட மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் குழுவினர் அவரது வீடு மற்றும் பழைய பைபாஸ் சாலையில் உள்ள அவரது அலுவலகம் ஆகிய இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தி.மு.க. ஒன்றிய செயலாளர் உறவினர்

தொடர்ந்து நடைபெற்று வரும் சோதனையில் சொத்து ஆவணங்கள், வங்கி கணக்கு உள்ளிட்டவைகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது. அப்போது துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சோதனை நேற்று இரவிலும் நீடித்தது. டயர் கடை மணி என்கிற காளியப்பன், நேற்று அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தப்பட்ட திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில், அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நெருக்கமானவராக கூறப்படும் தி.மு.க. ஒன்றிய செயலாளர் வீரா எஸ்.டி.சாமிநாதனின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தொடர்ந்து நடைபெற்று வரும் சோதனை முடிவில் தான் மத்திய அமலாக்க துறையினரால் முக்கிய ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்பட்டதா? என்பது தெரியவரும்.

Tags:    

மேலும் செய்திகள்