தி.மு.க. அரசு மக்கள் விரோத போக்கை கைவிட வேண்டும்

தி.மு.க. அரசு மக்கள் விரோத போக்கை கைவிட வேண்டும் என்று பொள்ளாச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.

Update: 2022-07-25 16:21 GMT

பொள்ளாச்சி

தி.மு.க. அரசு மக்கள் விரோத போக்கை கைவிட வேண்டும் என்று பொள்ளாச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.

ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து கோவை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னாள் அமைச்சரும், கட்சியின் தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ராந்தல் விளக்குகளை கையில் ஏந்தி மின் கட்டண உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. பேசும்போது கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், கோவை மாநகரில் தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்டு உள்ள பொதுமக்களின் மூச்சு காற்று பட்டாலே தி.மு.க. அரசு ஓடிவிடும். அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கட்டுக்குள் இருந்த கட்டுமான பொருட்களின் விலை தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் உயர்ந்து விட்டது. தி.மு.க. ஆட்சியில் எதற்கு எடுத்தாலும் ஊழல். மக்கள் போராட்டம் மூலம் ஊழல் ஆட்சி வெகு விரைவில் தமிழகத்தில் இருந்து விரட்டி அடிக்கப்படும்.

தேங்காய் விலை வீழ்ச்சி

அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பொதுமக்கள், விவசாயிகள் சந்தோஷமாக இருந்தனர். ஆனால் தற்போது மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்றால் இல்லை. கொப்பரை தேங்காய் விலை, தேங்காய் விலை வீழ்ச்சி காரணமாக விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் தனியார் எண்ணெய் நிறுவனங்கள் செழிப்பாக உள்ளது. பொள்ளாச்சி பகுதியில் குடிக்க தண்ணீர் இல்லை. விவசாயத்திற்கு போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை. பொள்ளாச்சி மக்களை பழிவாங்குவதற்கு இங்கிருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல திட்டம் அறிவித்து உள்ளனர்.

ஆழியாறில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு சென்றால் பொள்ளாச்சி பகுதி பாலைவனமாகி விடும். தி.மு.க. ஆட்சியை பற்றி பேசினால் வழக்கு போடுவார்கள். வீட்டிற்கு ரெய்டு வருவார்கள். நம்மல எதுவும் செய்ய முடியாது. அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை நிறுத்தி விட்டனர். 10 ஆண்டு காலம் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் மக்கள் பாதுகாப்பாக இருந்தனர். ஆனால் தற்போது தமிழகத்தில் சட்ட-ஒழுங்கு சரியில்லை. தி.மு.க.விற்கு சரியான பாடம் கற்பிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சட்டம்-ஒழுங்கு

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசும்போது கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டு உள்ளன. பொள்ளாச்சி தொகுதியில் மட்டும் ரூ.1,500 கோடிக்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்து 15 மாதங்களில் எதுவும் செய்யவில்லை. அ.தி.மு.க.வை விட சட்டசபை தேர்தலில் 1½ சதவீத வாக்குகள் தான் அதிகம் பெற்று உள்ளனர். தமிழகத்தில் சட்ட-ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது. தொண்டர்கள் கோவிலாக பார்க்கும் அ.தி.மு.க. அலுவலகத்தை ஓ.பன்னீர்செல்வம், மு.க.ஸ்டாலினுடன் சேர்ந்து உடைத்து உள்ளார்.

சொத்து வரியை 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை உயர்த்தி உள்ளனர். கொரோனா காலத்தில் வேலை இல்லாமல் மக்கள் கஷ்டப்பட்டு வருகின்றனர். சொத்து வரியை உயர்த்தினால் மக்கள் சிரமப்படுவார்கள் என்று அ.தி.மு.க. ஆட்சியில் சொத்து வரி உயர்த்தப்படவில்லை. ஆனால் தி.மு.க. எப்போது ஆட்சிக்கு வந்தாலும் சொத்து வரியை உயர்த்துகின்றனர். மத்திய அரசு சொல்வதை கேட்காதவர்கள். ஏன் மின் கட்டணத்தை உயர்த்த மட்டும் மத்திய அரசு சொல்வதை கேட்கின்றனர். கள்ளக்குறிச்சி கலவரத்தில் உளவுத்துறை தோல்வி அடைந்து விட்டது. இறந்த மாணவிக்கும் நீதி கிடைக்கவில்லை. கஞ்சா, நகை பறிப்பு, கொலை, கொள்ள என தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை.

மக்கள் விரோத போக்கு

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தவறு செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்று அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டார். ஆர்ப்பாட்டம் செய்தால் வழக்கு போடுவார்கள். எத்தனை வழக்கு போட்டாலும் பயப்பட மாட்டோம். இதற்கு காலம் பதில் சொல்லும். போலீசார் நடுநிலையிலையோடு நடந்து கொள்ள வேண்டும். எப்போதும் மக்களுக்காக அ.தி.மு.க. போராடும். கோவை மாவட்டத்தில் புதிதாக 6 அரசு கல்லூரிகள் கொண்டு வந்து, அவற்றிக்கு ரூ.9 கோடியில் கட்டிடமும் கட்டப்பட்டது. ஆனால் பணிகள் முடிந்து ஒராண்டு ஆகியும் இன்னும் திறக்கப்படவில்லை. பொள்ளாச்சி பஸ் நிலையத்தை சி.டி.சி. மேட்டிற்கு மாற்ற முயற்சி செய்கின்றனர். பொதுமக்கள், விவசாயிகள் விருப்பத்தை அறிந்து குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். தமிழக அரசு மக்கள் விரோத போக்கை கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் தாமோதரன், வி.பி.கந்தசாமி, அமுல்கந்தசாமி, மாவட்ட அவைத்தலைவர் வெங்கடாச்சலம், கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கஸ்தூரிவாசு, எட்டிமடை சண்முகம், ஒன்றிய செயலாளர்கள் முத்துகருப்பண்ணசாமி, சக்திவேல், கார்த்திக் அப்புசாமி, திருஞானசம்பந்தம், ஜி.கே.சுந்தரம், செந்தில்குமார், தேயிலை தோட்ட பிரிவு மாநில தலைவர் வால்பாறை அமீது, வால்பாறை நகர செயலாளர் மயில்கணேசன், மாவட்ட துணை செயலாளர் செல்வி பத்மினி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சாந்திமதி தோப்பு அசோகன், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் ராதாமணி, ஒன்றிய குழு தலைவர்கள் சாந்தி கார்த்திக், விஜயராணி ரங்கசாமி, சார்பு அணி மாவட்ட செயலாளர்கள் ரகுபதி, விஜயகுமார், ஜேம்ஸ்ராஜா, ஓ.கே.முருகன், குருசாமி, நிர்வாகிகள் கனகராஜ், அருணாசலம், அக்னீஷ்முகுந்தன், மார்ட்டின், ராஜ்கபூர், ஈஸ்வரன், ஒன்றிய செயலாளர்கள் ஜி.குமரவேல், வி.பி.கந்தவேல் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்