தி.மு.க. கொடிகளை அ.தி.மு.க.வினர் அகற்றக்கூறியதால் பரபரப்பு
மயிலாடுதுறையில் தி.மு.க. கொடிகளை அ.தி.மு.க.வினர் அகற்றக்கூறியதால் பரபரப்பு ஏறபட்டது
மயிலாடுதுறை அருகே உள்ள மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரியில் வணிகவியல் முதலாம் ஆண்டு படித்த மாணவர் சாரங்கபாணி இந்தி திணிப்பை எதிர்த்து 1965-ம் கல்லூரி வளாகத்திலேயே தீக்குளித்து இறந்தார். அவருடைய நினைவாக கல்லூரி வாசலில் நினைவுத்தூண் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு கட்சியினர் சாரங்கபாணி நினைவு தூணில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தி.மு.க. சார்பில் அஞ்சலி செலுத்துவதற்காக நினைவுத்தூண் அருகில் தி.மு.க. கொடிகள் நடப்பட்டு, விளம்பர பேனர் வைக்கப்பட்டிருந்தது. இதற்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து, அனைத்து கட்சியினரும் அஞ்சலி செலுத்தும் இடத்தில் உள்ள தி.மு.க. கொடிகளையும், பேனரையும் அப்புறப்படுத்தினால்தான் அஞ்சலி செலுத்துவோம் என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மயிலாடுதுறை போலீசார் அறிவுறுத்தியதன் பேரில் அப்பகுதி தி.மு.க. பொறுப்பாளர்கள் தங்கள் கட்சி கொடி மற்றும் பேனரை அகற்றினர். தொடர்ந்து மொழிப்போர் தியாகி சாரங்கபாணி நினைவு தூணில் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. மலர் வளையம் வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.