தி.மு.க. தலைவராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் தேர்வு

சென்னையில் நேற்று நடந்த பொதுக்குழு கூட்டத்தில் தி.மு.க. தலைவராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டி யின்றி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். துணை பொதுச்செயலாளராக கனிமொழி நியமிக்கப்பட்டார்.

Update: 2022-10-10 00:23 GMT

சென்னை,

தி.மு.க.வில் 15-வது உள்கட்சி தேர்தல் கடந்த மாதம் (செப்டம்பர்) நடைபெற்றது.

இதில் கிளை கழகம் முதல் மாவட்ட செயலாளர் பதவிகள் வரை நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மனு தாக்கல்

தி.மு.க. தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், 4 தணிக்கை குழு உறுப்பினர்கள் பதவியிடங்களுக்கு வேட்புமனுக்கள் பெறப்பட்டன.

தலைவர் பதவிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் பதவிக்கு அமைச்சர் துரைமுருகன், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு எம்.பி. ஆகியோர் மட்டும் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இதையடுத்து அவர்கள் 3 பேரும் இப்பதவிகளில் போட்டியின்றி தி.மு.க. பொதுக்குழுவில் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தி.மு.க. பொதுக்குழு கூட்டம்

இந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் காலை 7 மணி முதலே வர தொடங்கினர்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை 9.55 மணி அளவில் கூட்ட அரங்கிற்கு வந்தார். அப்போது அவரை அமைச்சர்கள், நிர்வாகிகள் உள்பட அனைவரும் எழுந்து நின்றும், கரவொலி எழுப்பியும் வரவேற்றனர். இதைத்தொடர்ந்து தி.மு.க. பொதுக்குழு கூட்டம் காலை 10 மணி அளவில் தொடங்கியது. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வரவேற்று பேசினார்.

2-வது முறையாக தி.மு.க. தலைவர்

தி.மு.க. தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், கணக்கு தணிக்கை குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்தலை கட்சியின் மூத்த நிர்வாகி ஆற்காடு வீராசாமி ஆணையராக இருந்து நடத்தி தரும்படி சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரான அமைச்சர் சேகர்பாபு முன்மொழிந்தார். இதனை மேற்கு மாவட்ட செயலாளர் சிற்றரசு வழிமொழிந்தார்.

இதைத்தொடர்ந்து ஆற்காடு வீராசாமி சக்கர நாற்காலி மூலம் மேடைக்கு அழைத்து வரப்பட்டார். அவர் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு பேசுகையில்,'தி.மு.க. தலைவர் பதவிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மனு மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவருடைய மனுவை 2 ஆயிரத்து 68 பேர் முன்மொழிந்தும், வழிமொழிந்தும் இருக்கின்றனர். அவருக்கு எதிராக போட்டி இல்லாததால் மு.க.ஸ்டாலின் 2-வது முறையாக ஒருமனதாக தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்' என்றார்.

இந்த அறிவிப்பை தொடர்ந்து கூட்டத்தில் பலத்த கரவொலி எழுந்தது. வாழ்க... வாழ்க... என்ற வாழ்த்து கோஷங்களும் காதை பிளந்தது. மு.க.ஸ்டாலின் தனது இருக்கையில் இருந்து எழுந்து நின்று அனைவரையும் பார்த்து வணங்கி வரவேற்பை ஏற்றார். பின்னர் புன்னகை பூத்த முகத்துடன் மேடை ஏறினார். அவருக்கு துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு உள்பட அமைச்சர்கள் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.

தணிக்கை குழு உறுப்பினர்கள்

மேடையில் பெரியார், அண்ணா, கருணாநிதி, அன்பழகன் ஆகியோரின் உருவப்படங்கள் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன. அந்த உருவப்படங்களுக்கு மு.க.ஸ்டாலின் வரிசையாக மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து தி.மு.க. பொதுச்செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோர் மீண்டும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்ற அறிவிப்பையும் ஆற்காடு வீராசாமி வெளியிட்டார். தணிக்கை குழு உறுப்பினர்களாக முகமது சகி, கு.பிச்சாண்டி, வேலுச்சாமி, சரவணன் ஆகிய 4 பேரும் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இத்துடன் தேர்தல் நடைமுறைகள் முடிந்தன. மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலினுக்கு தேர்தலை நடத்திய ஆற்காடு வீராசாமி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். பதிலுக்கு மு.க.ஸ்டாலின் அவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றார்.

கனிமொழிக்கு புதிய பதவி

மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவராக 2-வது முறை பதவி ஏற்றவுடன் புதிய நிர்வாகிகள் நியமனத்தை உடனடியாக அறிவித்தார். அப்போது அவர், தி.மு.க.வின் முதன்மை செயலாளராக அமைச்சர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்களாக அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, தி.மு.க. எம்.பி.க்கள் ஆ.ராசா, கனிமொழி, அந்தியூர் செல்வராஜ் ஆகிய 5 பேரின் பெயர்களை வாசித்தார்.

கனிமொழிக்கு மட்டும்புதிதாக பதவி வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் ஏற்கனவே இந்த பதவியில்தான் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்த்துரை வழங்கியவர்கள்

தேர்தல், புதிய நிர்வாகிகள் நியமனம் முடிந்ததையடுத்து மு.க.ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோருக்கு ஆளுயர ரோஜா பூ மாலைகளை அமைச்சர் சேகர்பாபு, மாவட்ட செயலாளர் சிற்றரசு ஆகியோர் அணிவித்து வாழ்த்தினர். அதேபோன்று புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கும் மாலை அணிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து தி.மு.க. முன்னாள் எம்.பி. பொன் முத்துராமலிங்கம், அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எ.வ.வேலு, எஸ்.ரகுபதி, தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க. எம்.பி.க்கள் தயாநிதி மாறன், திருச்சி சிவா ஆகியோர் வாழ்த்துரை வழங்கி பேசினார்கள். அதன் பின்னர் துணை பொதுச்செயலாளர்கள் கனிமொழி, அந்தியூர் செல்வராஜ், ஆ.ராசா, பொன்முடி, ஐ.பெரியசாமி, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, பொருளாளர் டி.ஆர்.பாலு, பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆகியோர் பேசினார்கள்.

மு.க.ஸ்டாலின் ஏற்புரை

இறுதியாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்புரை வழங்கி பேசினார். அப்போது அவருக்கு சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வெள்ளி செங்கோல் பரிசளிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் 2,500 பொதுக்குழு உறுப்பினர்கள், அனைத்து அமைச்சர்கள், முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன் எம்.பி., தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன், வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம், துணை செயலாளர் வி.பி.மணி உள்பட பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் என 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்