உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி பரிசு அறிவித்த சாமியாரின் உருவபொம்மையை எரித்து தி.மு.க.வினர் போராட்டம்
உதயநிதி ஸ்டாலினின் தலைக்கு ரூ.10 கோடி பரிசு அறிவித்த சாமியாரின் உருவப்படத்துக்கு தீ வைத்து தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறையில், சாமியாரின் உருவபொம்மையை எரித்தனர்.
நாகப்பட்டினம்,
சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசும்போது டெங்கு, மலேரியா, கொரோனா போன்றவற்றை போல சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசியது அகில இந்திய அளவில் பேசுபொருளாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
சனாதனத்தை ஒழிக்க வேண்டும் எனக்கூறிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும் என உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியைச் சேர்ந்த சாமியார் பரமஹம்ச ஆச்சார்யா அறிவித்தார்.
சாமியார் உருவபொம்மை எரிப்பு
அந்த சாமியாரை கண்டித்து நாகை அவுரி திடலில் நேற்று தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சாமியார் பரமஹம்ச ஆச்சார்யாவின் உருவப்படத்தை தி.மு.க.வினர் துடைப்பத்தால் அடித்து தீ வைத்து எரித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதேபோல் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு தி.மு.க.வினர் சாமியார் பரஹம்ச ஆச்சார்யா உருவ பொம்மையை தீவைத்து எரித்தனர்.
தூத்துக்குடியில்...
இதேபோல உத்தரபிரதேச சாமியாரை கண்டித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணியினர் தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் அருகே நேற்று மாலை அவரது உருவபொம்மையை எரித்து போராட்டம் நடத்தினர்.