இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. இளைஞரணி, மாணவரணி ஆர்ப்பாட்டம்

இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் தி.மு.க. இளைஞரணி, மாணவரணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-10-15 18:45 GMT

கோவை

இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் தி.மு.க. இளைஞரணி, மாணவரணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஒரே நுழைவு தேர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் தி.மு.க. இளைஞ ரணி மற்றும் மாணவரணி சார்பில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, மாநில இளை ஞரணி துணை செயலாளர் பைந்தமிழ் பாரி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வி.ஜி.கோகுல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.

புறாக்கள் பறக்கவிட்டனர்

ஆர்ப்பாட்டத்தின் போது பிரதமருக்கு தூது விடும் விதமாக புறாக்களை பறக்கவிட்டனர். இதையடுத்து கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. செயலாளர் நா.கார்த்திக் நிருபர்களிடம் கூறுகையில், இந்தியாவின் ஒற்றுமையை சிதைக்கும் அரசாக மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜனதா உள்ளது.

பல்வேறு மொழிகள், கலாசாரம் கொண்ட நாட்டை மாற்றி இந்தி தான் இந்தியா என்று செயல் பட்டு கொண்டிருக்கிறது.

மத்திய பா.ஜனதா அரசு உடனடியாக இந்த கொள்கைகளை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மொழித்திணிப்பால் ஏற்படும் புரட்சியின் வெற்றி போராட்டமாகவும் இது அமைந்து உள்ளது என்றார்.

முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி கூறும்போது, இந்தி திணிப்பிற்கு எதிரான போராட்டம் தொடரும். மத்திய அரசு எந்த வழியில் இந்தியை திணிக்க முயற்சி செய்தாலும் அதை முறியடிப்போம் என்றார்.

மேலும் செய்திகள்