தி.மு.க. முப்பெரும் விழாவுக்கான ஏற்பாடுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்
விருதுநகரில் வருகிற 15-ந்தேதி நடைபெற உள்ள தி.மு.க. முப்பெரும் விழா ஏற்பாடுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டதோடு, அதுபற்றி அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோரிடம் கேட்டறிந்தார்.
விருதுநகரில் வருகிற 15-ந்தேதி நடைபெற உள்ள தி.மு.க. முப்பெரும் விழா ஏற்பாடுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டதோடு, அதுபற்றி அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோரிடம் கேட்டறிந்தார்.
முதல்-அமைச்சர் வருகை
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை நெல்லையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். அதன்பிறகு அவர் மதியம் 1.30 மணி அளவில் விருதுநகருக்கு வருகை தந்தார்.
விருதுநகர் ஆர்.ஆர்.நகரில் உள்ள தனியார் விருந்தினர் மாளிகையில் கலெக்டர் மேகநாத ரெட்டி, போலீஸ் சூப்பிரண்டு மனோகர் ஆகியோர் புத்தகங்களை கொடுத்து முதல்-அமைச்சரை வரவேற்றனர். முதல்-அமைச்சருடன் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கே.என்.நேரு, மனோ தங்கராஜ், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரும் வந்திருந்தனர். விருதுநகரில் வருகிற 15-ந் தேதி நடைபெற உள்ள கலெக்டர் அலுவலக கட்டிட அடிக்கல் நாட்டு விழா மற்றும் தி.மு.க. முப்பெரும் விழா ஏற்பாடுகள் குறித்து அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோரிடம் கேட்டறிந்தார்.
பார்வையிட்டார்
அதன் பின்னர் நேற்று மாலை 5.30 மணியளவில் மதுரைக்கு காரில் புறப்பட்டார். வரும் வழியில் பட்டம்புதூரில் முப்பெரும் விழா நடைபெற உள்ள கலைஞர் திடலில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த இடத்தில் கட்சி நிர்வாகிகள் நின்று முதல்-அமைச்சருக்கு சால்வை வழங்கினர். சால்வையினை புன்முறுவலுடன் பெற்றுக்கொண்ட முதல்-அமைச்சர், பந்தல் அமைக்கும் பணி உள்ளிட்ட ஏற்பாடுகளை காரில் இருந்தே பார்வையிட்டார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டார். இதே போல் எம்.எல்.ஏ.க்கள் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், தங்கபாண்டியன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகளும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்றனர்.