சமூக வலைத்தளத்தில் தி.மு.க. குறித்து அவதூறு பரப்பியதாக பா.ஜ.க. ஆதரவாளர் கைது

சமூக வலைத்தளத்தில் தி.மு.க. குறித்து தவறான தகவல் பரப்பியதாக பா.ஜ.க. ஆதரவாளரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-06-06 22:53 GMT

திருப்பூர்,

பல்லடம் கரைப்புதூர் குன்னாங்கல்பாளையத்தை சேர்ந்த தி.மு.க. இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியம் என்பவர் திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதில் திருப்பூர் மாவட்டம் அவினாசி செம்பாக்கவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நேரத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சியதாக அவினாசி மதுவிலக்கு போலீசார் 2 பெண்கள் உள்பட 5 பேரை கைது செய்தனர். இதுகுறித்து தினசரி நாளிதழ்களில் கடந்த 28-5-2021 அன்று செய்தி வெளியானது.

இந்தநிலையில் சரவணபிரசாத் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில், அவினாசியில் கள்ளச்சாராயம் காய்ச்சிய தி.மு.க.வினர் 5 பேர் கைது என்ற தலைப்பிட்ட செய்தியை பதிவு செய்துள்ளார். 2 ஆண்டுகளுக்கு முன்பு வந்த செய்தியை தவறாக சித்தரித்து தி.மு.க. கட்சிக்கும், கட்சியினருக்கும் பொதுமக்கள் மத்தியில் களங்கப்படுத்தும் விதமாக தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டதைப்போல் தகவல் பரப்பிய சரவணபிரசாத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

கைது

இதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் உத்தரவின் பேரில் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்தநிலையில் சைபர் கிரைம் போலீசார் நேற்று சரவணபிரசாத்தை (வயது 52) கோவையில் கைது செய்தனர். இவர் சென்னை பழவந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் ஆவார். இவர் பா.ஜனதாவின் ஆதரவாளர் என்று கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்