70 அடி உயர கம்பத்தில் தி.மு.க. கொடியை ஏற்றிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
70 அடி உயர கம்பத்தில் தி.மு.க. கொடியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றினார்.
திருச்சி காட்டூரில் நடந்த அரசு விழாவில் கலந்து கொண்டுவிட்டு, பெரம்பலூர் மாவட்டத்துக்கு புறப்பட்டு சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சஞ்சீவிநகர் பகுதியில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், அங்கு தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டு இருந்த 70 அடி உயர கொடிக்கம்பத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. கொடியை ஏற்றி, வெள்ளை புறாக்களை பறக்கவிட்டார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ்பொய்யாமொழி, துணை மேயர் திவ்யா தனக்கோடி, 3-வது மண்டல குழு தலைவர் மு.மதிவாணன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் காலை 8.55 மணி அளவில் திருச்சி விமான நிலையம் வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கழக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என். நேரு மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மெய்யநாதன், மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் பலர் பங்கேற்று வரவேற்றனர்.