தி.மு.க. எம்.பி. மீதான கொலை வழக்கு செங்கல்பட்டு கோர்ட்டுக்கு மாற்றம் -ஐகோர்ட்டு உத்தரவு

கடலூர் தி.மு.க. எம்.பி., டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ் மீதான கொலை வழக்கை கடலூரில் இருந்து செங்கல்பட்டு கோர்ட்டுக்கு மாற்றி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-07-20 20:42 GMT

சென்னை,

கடலூர் தி.மு.க. எம்.பி., டி.ஆர்.வி.எஸ்.ரமேசுக்கு சொந்தமான முந்திரி ஏற்றுமதி தொழிற்சாலையில் பணியாற்றியவர் கோவிந்தராசு. இவர், கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து பதிவான கொலை வழக்கில் தி.மு.க. எம்.பி., டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி. போலீசார், குற்றப்பத்திரிகையை கடலூர் மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த நிலையில், இந்த வழக்கை கடலூர் கோர்ட்டில் இருந்து வேறு கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என்று கோவிந்தராசுவின் மகன் செந்தில்வேல், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அச்சம் உள்ளது

அதில், "குற்றம் சாட்டப்பட்ட நபர் தி.மு.க. எம்.பி. என்பதால் அவர் அரசு விழாக்களில் பங்கேற்று வருகிறார். கடலூர் மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு உள்ள வளாகத்துக்குள்ளேயே மாவட்ட கலெக்டர் அலுவலகமும், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகமும் உள்ளது. இதனால், எனது தந்தையின் கொலை வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளாக உள்ள முந்திரி ஆலைத் தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் கிராமமக்கள் பயமின்றி சாட்சி சொல்ல முடியாத நிலை உள்ளது. இந்த வழக்கு விசாரணையால் கோர்ட்டு பணியாளர்களும், போலீசாரும் கூட அச்சமடைந்துள்ளனர். அரசு தரப்பு குற்றவியல் வக்கீல் மீதும் நம்பிக்கை இல்லை" என்று கூறியிருந்தார்.

6 மாதத்தில் தீர்ப்பு

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், இந்த வழக்கை உள்ளூரில் நடத்த சாதகமான சூழல் இல்லை என மனுதாரர் கருதுவதால், இந்த வழக்கை புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கோர்ட்டுக்கு மாற்றுவதாக கூறினார். ஆனால், விழுப்புரம் மாவட்ட கோர்ட்டுக்கு மாற்றலாம் என்று அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, "இந்த கொலை வழக்கு விசாரணையை கடலூர் மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் இருந்து செங்கல்பட்டு மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டுக்கு மாற்றுகிறேன். செங்கல்பட்டு கோர்ட்டு இந்த வழக்கை 6 மாதங்களுக்குள் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும்" என்று உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்