தனியார் நிறுவனத்தில் புகுந்து தி.மு,க எம்.எல்.ஏ ஆபாசமாக திட்டி, கை கால்களை உடைத்து விடுவதாக மிரட்டல்

தனியார் நிறுவனத்தில் புகுந்து திமுக எம்.எல்.ஏ எஸ்.ஆர்.ராஜா மிரட்டல் விடுத்துள்ளார். ஆபாசமாக திட்டி, கை கால்களை உடைத்து விடுவதாக மிரட்டும் காட்சி வெளியாகி உள்ளது.

Update: 2022-09-22 05:23 GMT

சென்னை

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரை அடுத்த மெல்ரோசாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தின் உள்ளே சென்ற திமுக-வை சேர்ந்த தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, அந்நிறுவன நிர்வாகிகளை ஆபாசமாக திட்டி, கை கால்களை உடைத்து விடுவதாக மிரட்டும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் அருகே மெல்ரோசாபுரத்தில் பூஜா கோயல் என்பவருக்கு சொந்தமாக 1.77 ஏக்கர் நிலம்உள்ளது. அந்த இடத்தை் கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2028 வரை 10 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து எனும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இதனிடையே பூஜாகோயல் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தை வெளியேறுமாறு கூறியுள்ளார். ஆனால் அந்த நிறுவனத்தினர் குத்தகை காலம் முடிவடையாததால் தங்களால் வெளியேற முடியாது என திட்டவட்டமாக கூறி வந்துள்ளனர். இது தொடர்பாக 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மறைமலை நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவும் செய்யப்பட்டுள்ளது‌.

இதனிடையே, அந்த நிலத்தின் உரிமையாளர் எம்.எல்.ஏவை அணுகி தங்களது இடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தை வெளியேற்றி தருமாறு கூறியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தாம்பரம் எம்.எல்.ஏ எஸ்.ஆர்.ராஜா சம்பந்தப்பட்ட அந்த நிறுவனத்திற்கு சென்று ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்வதோடு ஒருமையில் பேசுவது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வெளியானது.

அந்த வீடியோவில் எம்.எல்.ஏ ராஜா ஒருவரை திட்டுகிறார். அவர் இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் புகார் அளிக்கப்படும் எனக் கூறியதும் கோபமடைந்த எஸ்.ஆர்.ராஜா மேலும் அவரை திட்டிவிட்டு கம்பெனியை இழுத்து முடிவிடுவேன் என மிரட்டுகிறார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து செல்ல முற்படுகிறார். அப்போது எதிரில் இருந்த நபர் நானும் திமுக காரன் தான் உங்களுக்கு ஓட்டு போட்ட எங்களுக்கே மரியாதை இல்லை, பாதுகாப்பு இல்லை என புலம்புகிறார்.

இதுகுறித்து நிறுவனத்தின் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், "எங்கள் நிறுவனத்தில் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஆர்.கே.சர்மா மீது ஊழல் புகார் விசாரணை நடைபெற்று வருகிறது. அவர் சுமார் 230 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கூட இந்த இடத்தை காலி செய்ய வேண்டும் என எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா தொலைபேசி வாயிலாக எங்களுக்கு மிரட்டல் கொடுத்தார். இந்நிலையில் இன்று திடீரென நிறுவனத்துக்குள் நுழைந்து எங்களை மிரட்டி உள்ளார். இதுகுறித்து தலைமைச் செயலாளரிடம் இணையதளம் மூலம் புகார் அளித்துள்ளோம்" என கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா கூறியதாவது: "நண்பர் தனது இடத்தில் பிரச்சனை உள்ளதாக அழைத்துச் சென்றார். உரிமையாளராக இருக்கும் என் நண்பருக்கு அங்கு வாடகைக்கு இருக்கும் நபர்கள் வழி விடுவதில்லை, எனவே அதுகுறித்து விசாரிப்பதற்காகவே நான் அங்கு சென்றேன்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்