பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து தி.மு.க. ஆட்சிக்கு வந்து விட்டதுஈரோட்டில் பிரேமலதா பேச்சு
பிரேமலதா பேச்சு
பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து தி.மு.க. ஆட்சிக்கு வந்து விட்டது என்று ஈரோட்டில் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
பிரசாரம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தே.மு.தி.க சார்பில் எஸ்.ஆனந்த் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து தே.மு.தி.க. மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 3-வது நாளாக நேற்று, ஈரோடு கள்ளுக்கடை மேடு, மரப்பாலம், மணிக்கூண்டு, ஈஸ்வரன் கோவில் வீதி, ராஜாஜிபுரம் அருள்நெறி பள்ளிக்கூட ரோடு ஆகிய பகுதிகளில் திறந்த வேனில் நின்றபடி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு முரசு சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் புறாவை பறக்கவிட்டு வாக்கு சேகரித்தார்.
முன்னதாக அவர் பேசும்போது கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முதல் பட்டணை அழுத்தி முரசு வென்றது என்ற சரித்திரத்தை படைக்க வேண்டும். ஏற்கனவே இந்த தொகுதியில் கடந்த 2011-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தே.மு.தி.க. வெற்றி பெற்றுள்ளது. விஜயகாந்த் நடிகராக இருந்தபோதே ஈரோடு கிழக்கு தொகுதியில் ஏராளமான நலத்திட்ட உதவிகளை மக்களுக்காக செய்துள்ளார். நெசவாளர்களுக்கு பிரச்சினை ஏற்பட்ட போது, அவர்களிடம் இருந்த துணிகளை வாங்கி, அதை ஏழை மக்களுக்கு கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தினார்.
பொய்யான வாக்குறுதி
விவசாயம், நெசவு ஆகிய தொழில்கள் நன்றாக இருந்ததால் தான் தமிழகம் வளர்ச்சி பெறும். இந்த 2 தொழிலுக்கும் பாதுகாப்பாக இருக்கக்கூடியவர் விஜயகாந்த். எனவே அவருக்கு நீங்கள் ஒரு வாய்ப்பு தர வேண்டும். தி.மு.க. பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்துவிட்டது. அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளில் எதையும் நிறைவேற்றவில்லை. இந்த தேர்தலில் நீங்கள் அவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். பால் விலை, மின்கட்டணம், குப்பை வரி, விலைவாசி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் நம்முடைய வேட்பாளர் வெற்றி பெற்றால் அனைத்து வரி உயர்வையும் குறைக்க நடவடிக்கை எடுப்பார். மேலும் ரோடு வசதி, சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தமிழகத்தின் முதன்மை தொகுதியாக ஈரோடு கிழக்கு தொகுதியை கொண்டு வருவார். மக்களை அடைத்து வைத்து அடிமைகள் போல் நடத்துவது வேறு எந்த தேர்தலிலும் நடைபெறவில்லை. இதை மனித உரிமை ஆணையம், தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்க்கிறது. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. லஞ்சம், ஊழல் செய்து கொள்ளையடித்த காசுதான் நமக்கு தருகிறார்கள். அதை நீங்கள் பெற்றுக்கொள்ளுங்கள். ஆனால் வருகிற 27-ந் தேதி நீங்கள் நல்லா யோசித்து யார் நல்லது செய்வார்கள் என்று சிந்தித்து வாக்களியுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அவருடன் தே.மு.தி.க. மாநில துணைச்செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி, அவைத்தலைவர் இளங்கோவன், கொள்கை பரப்பு செயலாளர் மோகன்ராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் உடன் இருந்தனர்