தி.மு.க. தற்போது ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கியுள்ளது
தி.மு.க. தற்போது ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கியுள்ளது
தி.மு.க.வை ஒரு குடும்பம்போல் அண்ணா வழிநடத்தினார். ஆனால் இன்றைக்கு ஒரு குடும்பத்தின் பிடியில் தி.மு.க. சிக்கியுள்ளது என்று முன்னாள் அமைச்சர் காமராஜ் பேசினார்.
பொதுக்கூட்டம்
தஞ்சை, ஒரத்தநாடு சட்டசபை தொகுதி அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் சாலையில் நேற்று இரவு நடந்தது. கூட்டத்திற்கு மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம் தலைமை தாங்கினார்.
ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளர் காந்தி, மாவட்ட அவைத் தலைவர் திருஞானசம்பந்தம், முன்னாள் மேயர் சாவித்திரி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் ராஜமாணிக்கம், மாவட்ட துணைச்செயலாளர் தவமணி மலையப்பன், திராவிடன் நகர கூட்டுறவு சங்க தலைவர் பங்சாபிகேசன், மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர் புண்ணியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிக்கல்சன் நகர கூட்டுறவு வங்கி தலைவர் சரவணன் வரவேற்றார்.
ஒரு குடும்பத்தின் பிடியில்...
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
தி.மு.க.வை ஒரு குடும்பம் போல் அண்ணா வழிநடத்தினார். ஆனால் இன்றைக்கு ஒரு குடும்பத்தின் பிடியில் தி.மு.க. சிக்கியுள்ளது. அ.தி.மு.க.வில் சாதாரணவர்கள் கூட எம்.பி., எம்.எல்.ஏ.வாகவும், ஆட்சி அதிகாரத்திற்கும் வர முடியும்.
அண்ணா கற்று கொடுத்த ஜனநாயக முறைப்படி பொதுக்குழு நடத்தப்பட்ட அதில் ஒற்றை தலைமை வேண்டும் என எல்லோரும் வலியுறுத்தினர். ஜனநாயக முறைப்படி தற்காலிக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தி.மு.க.வை எதிர்ப்பவர்தான் அ.தி.மு.க. தலைமையை ஏற்க வேண்டும். அதன்படி தி.மு.க.வை எதிர்த்து வரும் எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்றுள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.
காலம் தீர்மானித்து விட்டது
முன்னாள் அமைச்சரும், இலக்கிய அணி செயலாளருமான வைகைச்செல்வன் பேசும்போது, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பல்வேறு சோதனைகளை எல்லாம் தாங்கி 4 ஆண்டுகள் யாராலும் அசைக்க முடியாத அளவுக்கு கட்சியையும், ஆட்சியையும் எடப்பாடி பழனிசாமி வழிநடத்தினார். விரைவில் பொதுச் செயலாளராக அவர் தேர்வு செய்யப்படுவார்.
அ.தி.மு.க.வுக்கு சோதனை என்றால் ஒவ்வொரு தொண்டனும் சகித்துக்கொண்டு இருக்க மாட்டான். அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை போல் எடப்பாடி பழனிசாமியை காலம் தீர்மானித்துவிட்டது. அதனால் ஏற்று கொண்டுள்ளோம் என்றார்.
கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் ரத்தினவேல், தீப்பொறி ராமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. பூவை செழியன் ஆகியோரும் பேசினர்.
கூட்டத்தில் மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் நாகராஜன், ஒன்றிய செயலாளர்கள் ரத்தினசாமி, இளங்கோவன், மாநகராட்சி கவுன்சிலர் கோபால், நிர்வாகிகள் தங்க.கண்ணன், வேலுச்சாமி, தம்பிதுரை, ரத்தினசோமசுந்தரம், பாலைரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கவிதா கலியமூர்த்தி நன்றி கூறினார்.