விதிமீறலில் ஈடுபட்டதாக தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமானது உள்பட 12 கல்குவாரிகளுக்கு ரூ.44½ கோடி அபராதம்

கரூர் மாவட்டத்தில் விதிமீறலில் ஈடுபட்டதாக தி.மு.க. எம்.எல்.ஏ. பழனியாண்டிக்கு சொந்தமானது உள்பட 12 கல்குவாரிகளுக்கு ரூ.44½ கோடி அபராதம் விதித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Update: 2023-06-30 18:55 GMT

கல் குவாரி

கல் குவாரிகளில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகளின் உத்தரவின்பேரில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி வெளிமாவட்ட அதிகாரிகளை கொண்டு கரூர் மாவட்டத்தில் ஆய்வு செய்து அபராதம் விதித்து தொழிலை முடக்கும் எண்ணத்தோடு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் கரூர் மாவட்டத்தில் இனி கல் குவாரி மற்றும் கிரஷர் தொழில் நடத்த இயலாது என்ற சூழ்நிலை உருவாகி உள்ளது.

எனவே கரூர் மாவட்டத்தில் 22-ந்தேதி முதல் கல் குவாரி மற்றும் கிரஷர் தொழிலை நிறுத்தி வைப்பது என ஒருமனதாக முடிவு செய்துள்ளதாக கரூர் மாவட்ட குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் க.பரமத்தி வட்டார குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தனர்.

நடவடிக்கை

இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் தற்போது பட்டா நிலங்களில் 76 சாதாரண கல்குவாரிகளும், அரசு புறம்போக்கு நிலங்களில் 3 குவாரிகளுக்கும், குவாரி குத்தகை உரிமம் வழங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இவற்றில் பட்டாநிலத்தில் வழங்கப்பட்ட 12 குவாரிகள் முறையான அனுமதி பெற்றிருந்தும் தற்போது செயல்பாட்டில் இல்லை.

இந்நிலையில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலர்களின் ஆய்வின்போது விதிமுறைகளை மீறி கனிமங்கள் வெட்டியெடுக்கப்பட்ட குவாரிகளுக்கு அபராத நடவடிக்கை எடுக்க வருவாய் கோட்டாட்சியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டு வந்தது.

42 கல் குவாரிகளில்...

இதனையடுத்து கரூர் மாவட்டத்தில் குத்தகை நடப்பில் உள்ள கல்குவாரிகளில் விதிமீறல்கள் ஏதும் நடைபெற்றுள்ளதா என்பதை கண்டறிய மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், உதவி இயக்குனர் (நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை), வட்டாட்சியர் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் அடங்கிய குழு அமைத்து 42 கல் குவாரிகளில் கூட்டுப்புலத்தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதில் விதிமீறல்கள் கண்டறியப்பட்ட குவாரிகளுக்கு அபராதம் விதிக்க வருவாய் கோட்டாட்சியர்களுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது.

ரூ.44 கோடியே 65 லட்சம் அபராதம்

இந்த சோதனையின்போது அளவுக்கு அதிகமாக விதிமுறைகளை மீறி கனிமங்கள் வெட்டியெடுக்கப்பட்டு, விதிமீறலில் ஈடுபட்ட 12 கல் குவாரிகளுக்கு ரூ.44 கோடியே 65 லட்சத்து 28 ஆயிரத்து 357 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 30 குவாரிகளுக்கு அபராதம் விதிக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அபராதம் விதிக்கப்பட்ட கல் குவாரிகளில் கிருஷ்ணராயபுரம் வட்டம், சிவாயம் வடக்கு கிராமத்தில் உள்ள ஒரு குவாரி திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. எம்.பழனியாண்டிக்கு சொந்தமானது ஆகும். இவரது குவாரிக்கு மட்டும் ரூ.23 கோடியே 54 லட்சத்து, 14 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்