அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதுகாப்பு அரண் தி.மு.க. அரசு தான்;கார்மல் பள்ளி நூற்றாண்டு விழாவில் சபாநாயகர் அப்பாவு பேச்சு

அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதுகாப்பு அரண் தி.மு.க. அரசு தான் என நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழாவில் சபாநாயகர் அப்பாவு பேசினார்.

Update: 2023-02-04 17:57 GMT

நாகர்கோவில், 

அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதுகாப்பு அரண் தி.மு.க. அரசு தான் என நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழாவில் சபாநாயகர் அப்பாவு பேசினார்.

நூற்றாண்டு விழா

நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியில் உள்ள கார்மல் மேல்நிலைப்பள்ளியின் நூற்றாண்டு விழா நேற்று பள்ளி மைதானத்தில் நடந்தது.

விழாவிற்கு பள்ளி வளாக பொருளாளர் குமார் முன்னிலை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் ஜேசு நேசம் வரவேற்று பேசினார். தலைமை ஆசிரியர் மரியா பாஸ்டின் துரை ஆண்டறிக்கை வாசித்தார்.

சபாநாயகர் அப்பாவு

விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

குழந்தைகளின் திறமைகளை வெளிக் கொண்டு வருவதில் முக்கிய பங்கு ஆசிாியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் உள்ளது. நான் (அப்பாவு) நெல்லை மாவட்டம் காவல்கிணறு பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினேன். ஆசிரியர் பணி என்பது ஒரு தன்னலமற்ற பணியாகும். திறன்மிக்க மனிதர்கள், பல அறிஞர்கள், தலைவர்களையும் உருவாக்கியது பள்ளிகள் தான்.

முதல் பள்ளி பங்குதந்தையால்...

கேரளாவுடன் குமரி இணைந்திருந்த போது, கல்வி உரிமை மறுக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் கல்வி அறிவு பெற்றவர்கள் அதிகம் உள்ள மாவட்டமாக குமரி மாவட்டம் திகழ்கிறது. குமரி மாவட்டத்தில் முதன் முதலில் கல்வியை கொண்டு வந்த பெருமை பங்குதந்தைகளை சேரும். அதாவது 1806-ம் ஆண்டு குமரி மாவட்டம் மயிலாடியில் பங்குதந்தைகளால் முதன் முதலில் பள்ளி கொண்டு வரப்பட்டது.

தி.மு.க. எப்போதும் மக்களின் நலனுக்காக பாடுபடும் கட்சி. மாணவர்களின் கல்வி, விவசாயிகள், சிறுபான்மையினர், மாநிலத்தின் வளர்ச்சிக்கு எப்போதும் முன்னுரிமை வழங்கி வருகிறது. மாநிலத்தின் வளர்ச்சி, சமூக நீதியை தி.மு.க. அரசு இரு கண்களாக கொண்டு ஆட்சி செய்து வருகிறது.

சிம்ம சொப்பனம்

சாதி, மதம் கொண்டு அரசியல் செய்யும் கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பது தி.மு.க. அரசு. சமூக நீதிக்காகவும், மனிதர்களின் ஒற்றுமையை மேம்படுத்திடவும் கல்வி உதவுகிறது.

இந்த கல்வியை வியாபாரமாக சிலர் செய்வது வேதனை அளிக்கிறது. அய்யா வைகுண்டர் குமரி மாவட்டத்தில் சாதி வேற்றுமையை ஒழித்தார். சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டவர்கள் தமிழக மக்கள். சாதி, மதம் வைத்து வைத்து அரசியல் செய்ய நினைப்பவர்களுக்கு தமிழகத்தில் இடம் கிடையாது. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் அதிக என்ஜினீயரிங் கல்லூரிகள் கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

மக்களின் பாதுகாப்பு அரண்

அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதுகாப்பு அரணாக இருப்பது தி.மு.க. அரசு தான். காமராஜரை பெருமைப்படுத்தும் விதமாக தமிழக அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கி கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இதற்கு காமராஜர் பெயர் சூட்டப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து பள்ளிகளில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சபாநாயகர் அப்பாவு மற்றும் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். நிகழ்ச்சியில் கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை, பள்ளி தாளாளர் ஜெரோம், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்