எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்பில் தி.மு.க. தோல்வி - அண்ணாமலை
தமிழகத்தில் 39 இடங்களில் பா.ஜனதா வெற்றி பெறுவது நிச்சயம்.
மாமல்லபுரம்,
மாமல்லபுரத்தில், சர்வதேச யோகா தினத்தையொட்டி செங்கல்பட்டு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா சார்பில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, தமிழக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று யோகாசனம் செய்தனர். பின்னர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் இன்று 1200 இடங்களில் யோகா திருவிழா நடைபெறுகிறது. யோகக்கலையின் மையப் புள்ளி தமிழ்நாடு தான். வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவாய்ப்பு இல்லை. தமிழகத்தில் 39 இடங்களில் பா.ஜனதா வெற்றி பெறுவது நிச்சயம்.
திருவாரூர் கலைஞர் கோட்டம் திறப்பு விழாவிற்கு பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார் வரவில்லை. கடைசியில் பீகார் மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கலந்து கொண்டுள்ளார்.
அகில இந்திய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பில் தி.மு.க. தோல்வி அடைந்திருக்கிறது என்பது நேற்று நிதீஷ் குமார் தமிழகம் வராதது வெளிக்காட்டுகிறது செந்தில் பாலாஜி விஷயத்தில் தமிழக மனித உரிமை ஆணையம் தி.மு.க.வின் ஆணையமாக செயல்படுகிறது. செந்தில் பாலாஜிக்கு மருத்துவ சிகிச்சை அரசு ஆஸ்பத்திரியில் இல்லாமல் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு உள்ளது. அப்படியானால் ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் தரம் இல்லையா? இதனை மக்கள் கவனித்து வருகிறார்கள். வருகிற பாராளுமன்ற தேர்தலில் இதற்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்