நெல் கொள்முதல் முறைகேடு வழக்கில் தி.மு.க. பிரமுகர், கிராம நிர்வாக அலுவலர் கைது

நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் நெல் வாங்கியதாக போலி பில் தயாரித்து மோசடி செய்த வழக்கில் தி.மு.க. பிரமுகர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரை வேலூர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-11-29 12:55 GMT

நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் நெல் வாங்கியதாக போலி பில் தயாரித்து மோசடி செய்த வழக்கில் தி.மு.க. பிரமுகர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரை வேலூர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.

போலி பில் தயாரித்து மோசடி

தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக்கழகத்தின் கட்டுப்பாட்டில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் 80-க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. இவை ஆண்டுதோறும் சொர்ணவாரி, சம்பா, நவரை ஆகிய பட்டங்களில் (காரீப், ராபி பருவங்கள்) திறக்கப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு வேலூர் மாவட்டத்தில் 12 இடங்களிலும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 65 இடங்களிலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 10 இடங்களிலும் என சுமார் 87 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, அந்தந்த பகுதி விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டன.

கடந்த ஆண்டு காரீப் பருவத்தின்போது வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள பல்வேறு நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து குறைந்தளவே நெல் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் வியாபாரிகள், ஏஜெண்டுகளிடம் இருந்து அதிகளவு நெல் கொள்முதல் செய்யப்பட்டது. அவற்றை விவசாயிகளிடம் இருந்து வாங்கியது போன்று போலியாக பில் தயாரித்து அதிகாரிகள் மோசடியில் ஈடுபட்டதும், வியாபாரிகளிடம் இருந்து பெறப்பட்ட ஒரு நெல் மூட்டைக்கு ரூ.5 கமிஷன் பெற்றதாகவும் வேலூர் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு புகார்கள் சென்றன.

அதிரடியாக கைது

அதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு கவுதமன் உத்தரவின்பேரில், வேலூர் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி வழக்குப்பதிந்து நுகர்ப்பொருள் வாணிபக்கழகத்தில் இதுதொடர்பாக விசாரணை நடத்தினார். அதில், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை சேர்ந்த நுகர்ப்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர், துணை மண்டல மேலாளர், விற்பனை கண்காணிப்பாளர்கள் உள்பட பலர் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுவரை 30 பேரை கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் அரக்கோணத்தை அடுத்த சிறுகரும்பூரை சேர்ந்த தி.மு.க. கிளை செயலாளர் குமரவேல்பாண்டியன் (வயது 51), மேல்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் குமரவேல் (44) ஆகியோரை துணை போலீஸ் சூப்பிரண்டு கவுதமன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில், ''குமரவேல்பாண்டியன் தனது பெயர் மற்றும் மனைவி, மகன், உறவினர்கள் பெயரில் போலியான சிட்டா, அடங்கல் பெற்று சிறு, குறு விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலைக்கு நெல்மூட்டைகளை வாங்கி அவற்றை சிறுகரும்பூர் நெல் கொள்முதல் நிலையத்தில் விற்றுள்ளார். அவற்றின் மூலம் அவர் ரூ.1½ கோடி பெற்றுள்ளார். மேல்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் குமரவேல் பலருக்கு போலி சிட்டா, அடங்கல் வழங்கி இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்துள்ளார்'' என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்